Published : 31 Aug 2024 03:07 PM
Last Updated : 31 Aug 2024 03:07 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட 4 டன் எடை கொண்ட தேர் இன்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களையும் தளவாடங்களையும் தயார் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. இந்நிறுவனங்கள் மூலம் ஆன்மிக பணிகள் மற்றும் கோயில்களுக்குத் தேவையான பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் சியாட்டில் நகரில் வேதா என்ற கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட தங்கத் தேரை தயாரித்து பெற இந்த கோயில் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன்படி காஞ்சியில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு இதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 23 அடி உயரத்தில் 4 டன் எடையில் இரும்பு மற்றும் தாமிரத்தைப் பயன்படுத்தி தங்க மூலம் பூசப்பட்ட தேர் ஒன்றை அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் தேர் 75 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. 35 டிகிரி அளவுக்கு திரும்பும் வகையிலான தொழில்நுட்பத்துடன் இத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்துக்கும் எளிதில் கொண்டு செல்லும் வகையில் இத்தேரை 6 பாகங்களாக பிரிக்க முடியும். சிவா, விஷ்ணு என எந்த கடவுளுக்கும் பயன்படுத்தும் வகையில் தேர் அலங்கார பொம்மைகளை பொருத்திக் கொள்ளலாம். இதன் மதிப்பு ரூ.1.25 கோடி. இந்தத் தொகையை சியாட்டில் நகரில் உள்ள வேதா கோயில் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இந்தத் தேர் 6 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு இன்று விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT