Published : 28 Jun 2018 11:00 AM
Last Updated : 28 Jun 2018 11:00 AM

கூத்தனூரில் அருளும் கலைமகள்

ஜூலை 1-ல் கும்பாபிஷேகம்

ஆயகலைகள் அறுபத்து நான்கையும் அருளும் கலைமகளாம் சரஸ்வதி ஒருமுறை தவம் செய்ய நினைத்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் கூத்தனூர். சரஸ்வதி அம்பாள் தவம் புரிந்த இடமாதலால், இந்த ஊருக்கு அம்பாள்புரி என்ற பெயரும் உண்டு. வரகவியான ஒட்டக்கூத்தர் கவிபாடும் திறன் வேண்டி சரஸ்வதியைப் பூஜிக்க முடிவு செய்தார். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து, சோழவள நாட்டில் தட்சிண வாகினியாய் ஓடும் மகா நதியான அரிசில் ஆற்றில் (ஹரிசொல் மாநதி) தண்ணீர் எடுத்து சரஸ்வதி அம்மனை அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார்.

ஒட்டக்கூத்தரின் பூஜையில் மகிழ்ந்த சரஸ்வதி தனது வாயில் இருந்து தாம்பூலத்தை எடுத்து அவருக்கு அளித்து வரகவி ஆக்கினார் என்பது தல வரலாறு. தனக்கு அருள் புரிந்த சரஸ்வதியை ‘ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய’ என்று பரணி பாடி வாழ்த்தியுள்ளார் ஒட்டக்கூத்தர். அவரது கவித்திறமையைப் போற்றி தஞ்சையை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சரஸ்வதி அருள்பாலித்த ஊரை ஒட்டக்கூத்தருக்கே பரிசாக அளித்தான். அதனால் இந்த ஊர் அவரது பெயராலேயே ஒட்டக் கூத்தனூர் என்று அழைக்கப்பட்டு இப்போது மருவி கூத்தனூர் ஆகிவிட்டதாக வரலாறு கூறுகிறது.

சரஸ்வதிக்குத் தமிழகத்திலேயே கூத்தனூரில்தான் தனிக் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் ஒட்டக்கூத்தர் ஏற்படுத்திய பூந்தோட்டத்தின் பெயரால் பூந்தோட்டம் என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 5 நிமிட தூரத்தில் கூத்தனூரில் சரஸ்வதி அம்மன் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார்.

சரஸ்வதி அம்மனுக்கு விளம்பி வருஷம் உத்தராயண புண்யகாலம் ஆனி மாதம் 17-ம் தேதி (1-7-2018) ஞாயிற்றுக்கிழமை, திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை காலை 9.12 முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னம் சுபவேளையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கலைகளை அருளும் கூத்தனூர் கலைவாணியைப் போற்றுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x