Published : 21 Aug 2024 12:59 PM
Last Updated : 21 Aug 2024 12:59 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு விழா இன்று (ஆக.21) நடைபெற்றது. அதன் அருகே உள்ள முனியய்யா கோயிலும் மின்னொளியில் ஜொலித்தது.
கோட்டைப்பட்டினத்தில் ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் கடந்த வாரம் தொடங்கியது. தொடர்ந்து மாலையில் ரத ஊர்வலமும் நடைபெற்றது. பின்னர், இரவில் பாத்திஹா (குர்ஆன்) ஓதப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில், முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி இன்று அதிகாலை கூட்டுக் கொட்டகையில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தாரை, தப்பட்டை முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை வந்தடைந்தது. வண்ண விளக்குகளால் வாண வேடிக்கை நடைபெற்றது. பின்பு, ராவுத்தர் அப்பா அடக்கஸ்தலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜமாத்தார்கள், கந்தூரி கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். ராவுத்தர் அப்பா அடக்கஸ்தலம் அருகிலேயே முனியய்யா கோயிலும் அமைந்துள்ளது. தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டைப் போன்று முனியய்யா கோயிலும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. ராவுத்தர் அப்பாவும், முனியய்யாவும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, உற்ற தோழராக இருந்துள்ளது தெரிகிறது.
அதை இன்றளவும் மெய்ப்பிக்கும் விதமாக கந்தூரி விழாவின் போது ராவுத்தர் அப்பா ஒலியுல்லா தர்ஹாவோடு முனியய்யா கோயிலிலும் கோயிலும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT