Published : 21 Aug 2024 04:50 AM
Last Updated : 21 Aug 2024 04:50 AM
சென்னை: சென்னையில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் பிலாஸ்பூர் சுவாமிகள், அனைவரும் சமூக நலனுக்காக பாடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசக்ர மஹா மேரு பீடம், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நிறுவப்பட்ட மஹாமேரு மற்றும் ஸ்ரீசக்ர வழிபாட்டு மையமாகும். விலாசபுரி என்று அழைக்கப்பட்ட பிலாஸ்பூரில் சாக்த வழிபாடு நடைபெறுகிறது.
அத்வைத சந்நியாசியான ஸ்ரீசக்ர மஹாமேரு பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீசச்சிதானந்த தீர்த்த சுவாமிகள், சுவாமிஜி காசி ஸ்ரீ ஸ்ரீ ஈஸ்வரானந்த தீர்த்த மகா சுவாமியிடம் இருந்து சந்நியாச தீட்சை பெற்று, 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பீடத்தை நிறுவியுள்ளார்.
பின்தங்கிய கிராமங்களை தத்தெடுத்து மக்களுக்கு சனாதன தர்ம வாழ்க்கை முறையைக் கற்பித்தல், பிலாஸ்பூர், அமர்கந்தாக், வாராணசியில் ஸ்ரீவித்யா (சுக்ல யஜூர்) வேத பாடசாலாக்கள் நிறுவி, வேதம் பயிற்றுவித்தல், சத்தீஸ்கர் கல்வி வாரியத்துடன் இணைந்த ஸ்ரீ சச்சிதானந்த வித்யாலயா பள்ளியை இயக்கி, குழந்தைகளுக்கு இலவச சம்ஸ்கிருத கல்வி அளித்தல், கோ சம்ரக் ஷண சாலா மூலம் பசுக்கள் பாதுகாப்பு, கன்யா விவாகத்துக்கு பொருளுதவி செய்தல், சமஷ்டி உபநயனம் செய்வித்தல் உள்ளிட்டவற்றை இப்பீடம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் சமூக விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியினரின் ஆன்மிக மற்றும் சமூக நலனுக்காக இப்பீடம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, சுவாமிஜி, இந்த வருட சாதுர்மாஸ்ய விரதத்தை ஜூலை 21-ம் தேதி முதல் திருவான்மியூர் அமரபாரதி கல்யாண மண்டபத்தில் (வடக்கு மாட வீதி, மருந்தீஸ்வரர் கோயில் அருகில்) கடைபிடித்து வருகிறார். குருபூர்ணிமா வியாச பூஜை, சாதுர்மாஸ்ய சங்கல்பத்துடன் தொடங்கிய இவ்விரதம், புரட்டாசி 2 (செப். 18-ல்) நிறைவு பெறுகிறது.
இந்த நிகழ்வை முன்னிட்டு தினமும் மகா திரிபுரசுந்தரி, மகா பெரியவா, சந்திரமவுலீஸ்வர பூஜைகள், வேத பாராயணம், வேத பரீட்சை, உபன்யாசங்கள், சிறப்பு பிக் ஷாவந்தனம், இசை, நாமசங்கீர்த்தனங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுவாமிஜி, அனைவரும் சமூக நலனுக்காக பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சாதுர்மாஸ்ய விரதம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 9003222621 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT