Published : 31 May 2018 10:49 AM
Last Updated : 31 May 2018 10:49 AM
அ
ல் கஸாலி, பாரசீகத்தைச் சேர்ந்த சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், பாக்தாத்தின் நிஸாமையா கல்லூரியில் இஸ்லாமிய நீதி பரிபாலனத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். வாழ்வின் ஆழ்ந்த உண்மைகளைத் தேடுவதிலேயே அவர் தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைச் செலவிட்டார். “மனிதர்கள் நித்திரையில் இருக்கிறார்கள். இறப்பிலேயே அவர்கள் விழிப்படைகிறார்கள்” என்ற முகம்மது நபியின் வாக்கின்படி, அவர் தன் வாழ்வை அமைத்துகொண்டார்.
மதம், தத்துவம், உள்ளுணர்வு போன்ற அம்சங்களை அடிப்படையாக வைத்து அவர் வாழ்வின் ஆழ்ந்த உண்மைகளைத் தேடினார். தீவிரமான இந்தத் தேடல் அவருக்கு நரம்புத் தளர்ச்சியை அளித்தது. சில காலம் பேராசிரியர் பணியிலிருந்து விலகியிருந்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சிரியாவில் மெய்ஞானத்தைத் தேடித் தெளிந்தபிறகே மீண்டும் பேராசிரியர் பணிக்குத் திரும்பினார்.
இறைவனை நேரடியாக உணர்வதற்கான பாதையை அவர் தன் படைப்புகளின் வழியாகப் பதிவு செய்தார். அந்த வகையில் ‘The Revival of the Religious Sciences’ என்ற அவரது ஆய்வுப் படைப்பு இஸ்லாமின் அரிய சொத்தாகக் கருதப்படுகிறது. இந்தப் படைப்பின் சுருக்கமான வடிவத்தைத் தான் பாரசீக மொழியில் 1105-ம் ஆண்டு, ‘கிமியா-இ-சாதத்’ (‘The Alchemy of Happiness’) என்று எழுதி அவர் வெளியிட்டார்.
இறையே மகிழ்ச்சி
‘தி அல்கெமி ஆஃப் ஹேப்பினெஸ்’ என்ற இந்தப் புத்தகத்தின் முதல் நான்கு அத்தியாயங்கள் முகம்மது நபிகளின் போதனைகளை விளக்குகிறது. இறையின் அருகில் இல்லாமல் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியாது என்ற கருத்தை இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது. இந்தப் புத்தகம் ஒன்பது நூற்றாண்டுகளாக இஸ்லாமிய மார்க்கத்தின் சிறந்த விழுமியங்களை அறிந்துகொள்வதற்கு உதவிவருகிறது. ஒரு சாமானிய மனிதனை ‘விலங்கிலிருந்து தேவதை நிலைக்கு’ உருமாற்றும் நான்கு அம்சங்களை கஸாலி இந்தப் புத்தகத்தில் விரிவாக அலசியிருக்கிறார். அவற்றை ‘சுய அறிவு’, ‘இறை அறிவு’, ‘உலக அறிவு’, ‘மறுமை உலக அறிவு’ என்று அவர் வகைப்படுத்துகிறார்.
சுயத்தை அறிவதற்கான பாதை
நம்மைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளாமல் நம்மால் எதையும் இந்த உலகத்தில் அடைய முடியாது என்ற எளிய உண்மையை இந்தப் புத்தகம் புரியவைக்கிறது. சுயத்தை அறிந்துகொள்வதற்கான திறவுகோலாக இதயம்தான் செயல்படுகிறது. அது வெறுமனே உடலின் இதயம் அல்ல. இறைவனால் வழங்கப் பட்ட இதயம் அது. “அது ஒரு யாத்ரீகன் அந்நிய நிலத்துக்குச் செல்வதைப்போல இந்த உலகுக்கு வருகிறது. மீண்டும் அது வந்த இடத்துக்கே திரும்பச் சென்றுவிடுகிறது” என்று சொல்கிறார் கஸாலி. ஆன்மாவின்மீது போதிய கவனம் செலுத்தாதவன் இந்த உலகம், அந்த உலகம் என இரண்டிலும் தோற்றுப்போகிறான். சுயத்தை அறிந்து விலங்கின் நிலையிலிருந்து உயர் விழிப்பு நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொள்பவன் மகிழ்ச்சியின் சுய ரசவாதத்தை அனுபவிக்கிறான்.
இறை அறிவுக்கான பாதை
மனிதர்கள் இந்தப் பூமியில் தாங்கள் படைக்கப்பட்டதற்கான காரணத்தைத் தேடுவதற்கு மறுக்கிறார்கள். “மனிதன் வெறுமனே இருந்த காலம் அவனுக்கு ஒருபோதும் நினைவுக்கே வராதா?” திரு குர் ஆனின் வரிகளை மேற்கோள்காட்டுகிறார் கஸாலி. மனிதர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் மனக்குறைகள் அவர்களை இறைவனின் அருகில் அழைத்துவருவதாக விளக்குகிறார் அவர்.
உலக அறிவுக்கான பாதை
மனித உடலை குதிரையுடனும், ஒட்டகத்துடனும் ஒப்பிடுகிறார் கஸாலி. ஆன்மா தன் வாழ்க்கைப் பாதையை உடலைப் பயன்படுத்திக் கடப்பதாகத் தெரிவிக்கிறார். மெக்கா புனித யாத்திரைக்குச் செல்லும் பயணி எப்படித் தன் ஒட்டகத்தைப் பாதுகாப்பானோ, அப்படி ஆன்மா தன் உடலைப் பாதுகாக்க வேண்டும். அதேநேரத்தில், அந்தப் பயணி ஒட்டகத்தையே கவனித்துகொண்டிருந்தால், அந்தப் பயணம் தோல்வியில்தான் முடியும். இறைவனைவிட்டு விலகும் பெரிய முடிவைப் பெரும்பாலான மக்கள் எடுப்பதில்லை. ஆனால், அற்பமான விஷயங்களில் அவர்களுக்கு இருக்கும் நாட்டம், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை இறைவனைவிட்டு விலகச் செய்கிறது.
மறுமை உலக அறிவுக்கான பாதை
குர்ஆனின் கூற்றுபடி, ஆன்மாக்களின் விருப்பத்தை மீறி சிறந்த அறிவையும் அனுபவத்தையும் பெறுவதற்காக பூமிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அவை பூமிக்கு வருவதற்கு அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை என்று அதற்குச் சொல்லப்படுகிறது. எப்படி வாழ வேண்டும் என்ற இறைவனின் வழிகாட்டுதலுக்காக ஆன்மாக்கள் காத்திருந்தாலே போதுமானது. “நம்பிக்கையற்றவர்களையே நரகம் சூழ்கிறது” என்ற குர் ஆன் வரிகளை நினைவில் வைக்கச் சொல்கிறார் கஸாலி.
1909-ம் ஆண்டு இந்துஸ்தானி மொழிபெயர்ப்பாளர் கிளவுட் ஃபீல்ட் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்படித்தான் இந்தப் புத்தகம் மேற்கு உலகத்துக்கு அறிமுகமானது. பிரபல சூபி கவிஞர் ரூமி, கஸாலியின் ‘The Revival of the Religious Sciences’ படைப்பிலிருந்து பல நீதிக்கதைகளைத் தன் ‘மஸ்னவி’ படைப்பில் பயன்படுத்தியிருக்கிறார்.
“ஓர் அந்நிய நிலத்துக்கு வந்திருக்கும் யாத்ரீகர்கள்” என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். அனைத்து பொருட்களும் பிறக்கும் நித்தியமான இயல் கடந்த நிலைக்குத் திரும்பும் நீண்ட பயணத்துக்கான விருப்பும் இருந்தால் போதும்; மனித வாழ்க்கையில் அமைதியைக் கண்டடையலாம் என்று இந்தப் புத்தகத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் கஸாலி.
கஸாலி
கஸாலியின் முழுப்பெயர் அபூ ஹமித் முகம்மது இப்னு முகம்மது அல்-கஸாலி. இவர் 1058-ம் ஆண்டு தூஸ் நகரத்தில் (தற்போதைய வடக்கு ஈரான்) பிறந்தார். இவர் இஸ்லாமிய மார்க்கத்தின் தலைசிறந்த பாரசீக இறையியல் வல்லுநராகவும், சட்டவியல் வல்லுநராகவும், தத்துவ அறிஞராகவும் விளங்கினார். இவர் தனது சுயசரிதையான ‘The Deliverance from Error’ புத்தகத்தில் தான் சந்தித்த ஆன்மிக நெருக்கடிகளைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். இஸ்லாம் மார்க்கத்தின் செல்வாக்கு மிகுந்த ஆளுமையாக அறியப்படுகிறார். ‘இஸ்லாமின் சாட்சி’ என்ற தனித்துவமான பட்டம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT