Last Updated : 14 Aug, 2024 09:14 AM

 

Published : 14 Aug 2024 09:14 AM
Last Updated : 14 Aug 2024 09:14 AM

‘கானக காளி கரிமலை கார்த்திகாயினி தேவி!’ - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 4

கரிமலை கார்த்திகாயினி தேவி அம்மனுக்கு நெய்வேத்தியம் படைக்கும் விஜய் ஐயப்பன்

‘‘இருமுடி ஏந்தி திருவடி தேடி
வருவேனே ஐயா

கரிமலை மேலே வரும் வழி பார்த்து
காத்திடும் என் ஐயா

தேக பலம் தா, பாத பலம் தா...
தேக பலம் தா, பாத பலம் தா...
தேடி வரும் நேரம்!’’

உத்திர நாயகனின் வனப்பைக் காணும் பயணத்தில், இதோ கரிமலை ஏறத் தொடங்கிவிட்டோம். முழுக்க முழுக்க இது அட்டைப்பூச்சிகள் நிறைந்த அடர்வனப் பகுதி. காட்டின் உள்ளே புக புக அத்தனை அமைதியாக இருந்தது வனம். கூடவே மனம். நடையின் வேகத்தால் அந்த காலை நேரத்திலேயே அப்படி வியர்க்கத் தொடங்கியிருந்தது.

கரிவலம்தோடுவில் இருந்து அரை காத தொலைவில் நடந்தால் வருகிறது ஒரு சிறிய சுனை. பாதை முழுவதும் கூரான நேர் செங்குத்து ஏற்றம். சுனையைச் சுற்றிலும் அதிவனப்புமிகு பகுதி. உச்சி நோக்கி செல்லும் பாதை முழுவதும் ஈரமிகு குளிரினால் வழுக்கு நிறைந்து படர்ந்த பாசியானது பார்க்கவே கண்களுக்கு பசும்பச்சையாக இருக்கிறது. சுனையில் இருந்து விழும் ஓடை நீரின் நடுவினில், கஷ்டத்திலும் நஷ்டத்திலும் பிறவிப்பலன் தீர்க்க, நம்பிக்கையுடன் இம்மலையில் கால் பதித்து நடப்பவர்களுக்கு தாயாய் அரவணைத்துக்கொள்ள கொலுவீற்றிருக்கிறாள் அம்மன்.

வருடத்திற்கு ஒருமுறை திறக்கப்படும் பெரும்வழிப்பாதையில் வரும் பக்தர்கள் மட்டுமே இவளை தரிசிக்க முடியும். தொழுத கைகளுக்கு வரம் தர, கூப்பிட்டக் குரலுக்கு ஓடோடி வர உருவேத்தி காத்திருக்கிறாள் அந்த உக்கிர வன காளி கரிமலை கார்த்திகாயினி.

கொட்டிய தண்ணீரை, வேகமாக வழித்தோடிக் கொண்டிருந்தது சுனை. அருகில் வனதேவதை, யட்சிணிகளின் அமானுஷ்ய பாதுகாப்பில் அம்மன். அத்தனை சாந்தமாக காட்சியளிக்கிறாள். ஏறி வந்த களைப்புத் தீர அம்மனை தரிசித்துவிட்டோம்.

நெடுந்தொலைவில் எங்கோ ஏற்றத்தில் பெரும் உடல் வலுகொடுத்து மலை ஏறி கொண்டிருந்த ஐயப்பமார்களின் சரண கோஷங்கள் வனமெங்கும் எதிரொலித்து முட்டி மோதி சுனையின் அருவி சத்தத்தோடு கலந்து மறைந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அத்தனை நிசப்தம்.

மலையில் எண்ணி பத்து பதினைந்து பேர் தான் அன்று இருந்தோம். ஆளரவமற்ற அமைதி. அந்த இடத்தில் அம்மனுக்கு காட்டிய தீப ஆரத்தியுடன் கூடிய மணியோசை அப்படியொரு தெய்வீக உணர்வை எழுப்பி சிலிர்க்க வைத்தது. இந்த அனுபவத்திற்காகவே வருடா வருடம் பெரும்பாதையில் பயணித்து அம்மன் அவளை தரிசித்து செல்ல வேண்டும். இவ்வளவு அமைதி, மன அமைதி வேறெங்கிலும் எத்தனை விலை கொடுத்தாலும் கிடைத்திடாது.

மளமளவென அம்மனுக்கு தண்ணீரில் ஜலக்கிரிடை செய்து, பன்னீரில் அபிஷேகம் நடத்தினார் விஜய் ஐயப்பன். பின் ஓரிரு மணித்துளிகளில், மஞ்சள் பூசி, குங்கும திலகமிட்டு, தித்திப்பாய், அருள் காட்சி தந்துவிட்டாள். திகட்ட, திகட்ட பார்வைக்கு கிட்டியவள் முழு நிலவாக, தத்ரூபமாக வன உஜ்ஜையினி, பவானி, தாட்சாயினியாக காட்சியளித்துவிட்டாள் சாட்சாத் ஆதி சக்தி. கூடவே, கரிவலம்தோடுவில் தயார் செய்த நெய்வேத்தியமும் படைக்கப்பட்டது.

ஓடை நீர் முழுவதும் கீழ்நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. இருமுடியுடன் அத்தனை ஐயப்பமார்களும் சுற்றி நின்று வழிபட்ட அந்த நொடி அம்மன் சிலை பகுதியில் வாசம் செய்து கொண்டிருந்த அந்த நாகம் சராலென தண்ணீரின் போக்கில் பாய்ந்து வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

எதிர்திசையில் தண்ணீருக்குள் இறங்கி நான் மட்டும் நிற்கிறேன். எதிர்வரும் நாகத்தை கண்ட நான்... மற்றவர்களிடம் பாம்பு என்று சத்தமாக கூறி உஷார் படுத்திவிட்டு கரையேற எத்தனித்தேன். அதற்குள் என் அதிர்வினை கண்ட அந்த நாகம் திரும்பவும் வந்த திசையை நோக்கி திரும்பி... நீரின் வழித்தடத்திலேயே எதிர்த்து சுனைக்குள் சென்று மறைந்து விட்டது.

அதன்பிறகும் அம்மனுக்கான பூஜைகள் தொடர்ந்தது. அம்மனோ, அத்தனை அழகாக இருந்தாள். காட்சி தந்த அம்மனுக்கு ஒரு சரணமென்க, ‘கரிமலை கார்த்திகாயினி தேவியே சரணம் ஐயப்பா!’ என்று சுற்றி நின்ற ஐயப்பமார்களின் பெருங் கோஷம் அந்த வனாந்தர காட்டின் அமைதியை கரகரவென கிழித்து அதிர்ந்தது. அந்த இடத்தில் ஒருவிதமான ஈர்ப்பு இருந்ததை உணர முடிந்தது.

பலபல வருடங்களாக இந்த வன காளிக்கு, சபரிமலைக்கு மாலைபோட்டு மலையேறும் நாளில் எல்லாம் தவறாமல் பூஜை புனஸ்காரம் செய்து வணங்கி கொண்டிருக்கிறார் எங்கள் சிதம்பரம் ஆடிட்டர் குரு வைத்தியநாதன் ஐயப்பன்.

சிதம்பரம் ஆடிட்டர் குருநாதர் வைத்தியநாதன் ஐயப்பன்...

அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கதை காரணமாக இருக்கிறது. அத்தனை சக்தி மிக்க தெய்வம் கரிமலை கார்த்திகாயினி.

அம்மனிடம் , தங்கள் வீட்டிலிருக்கும் பெண் பிள்ளைகள், தாய்மார்களுக்கும் எந்தவித நோய்களும், உபத்திரங்களும், சஞ்சலங்களும் இல்லாதிருக்க அவர்களுக்காக பிரத்தயேகமாக வேண்டி, புதிதாக வாங்கி கொண்டு வைத்திருந்த தைக்காத ஜாக்கெட் பிட் துணிகளை அந்த வன காவல்தெய்வம் கரிமலை கார்த்திகாயினி அம்மனுக்கு சாத்தி வேண்டுதல் நடத்துவார் குருநாதர் வைத்தியநாத ஐயப்பன்.

மற்றவர்களெல்லாம் அவரவர்கள் குடுத்தினருக்காக வாங்கி கொண்டு சென்ற ஜாக்கெட் பிட் துணிகளை தன் முன்பாக வைத்து அதில் மூன்று பெரிய மஞ்சள் துண்டுகளை அம்மனாக பாவித்து, அதற்கு மஞ்சள் பொடியாலும், குங்குமத்தாலும் லலிதா சகஸ்ரநாமம் 1008 சொல்லி மஞ்சள் குங்குமத்தை தூவி அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தார்கள். குருநாதர் சொல்ல சொல்ல, மற்ற ஐயப்பன்மார்கள் அனைவரும் பின்னின்று தேவியே போற்றி என உச்சஸ்தாயில் சொல்லச்சொல்ல கானகம் அதிர்ந்திட்ட அந்த ஒரு நொடிப்பொழுதில், வான் தொடும் ஒற்றை, நேர், நெடிதுயர்ந்த அருகாமை மரத்தினை ஏறிட்டு வான் நோக்கிப் பார்த்தமாத்திரத்தில் அதன் நெடுநெடு உயரம் எனை ஒரு சுழற்று சுழற்றிட, எட்டுத்திக்கும் சுற்றிப் பார்த்த என்னுள், அந்த காட்டின் பிரமாண்டம், இயற்கையின் பிரபஞ்சம் ஓர் ஆனந்த பரவசத்தை உருவாக்கியிருந்தது.

இப்போது அனைவரும் அந்த இயற்கை தாயிடம் முழுவதுமாக வசப்பட்டிருந்தோம்.

அப்போது கூட்டத்திலே ஒரு குரல் உச்சஸ்தாயில் அழகாக அம்மனை துதித்துப் பாட ஆரம்பித்திருந்தது.

‘‘சின்னஞ்சிறு பெண்போல,
சிற்றாடை உடை உடுத்தி...

கரிமலை சுனை அருகே,
கார்த்திகாயினி தேவி...

என்னவளின் கண் அழகை, பேசி முடியாது

பேரழகுக்கீடாக

வேறொன்றும் கிடையாது

கரிமலை சுனையருகே

ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்

மின்னலைப் போல் மேனி

அன்னை சிவகாமி

இன்பமெல்லாம் தருவாள்

எண்ணமெல்லாம் நிறைவாள்

தீரா வினையை தீர்த்தே தருவாள்...

சிதம்பரம் பிரபு குரு ஐயப்பமார்கள் தொழுதிட, அவள் இன்பமெல்லாம் தருவாள்!

என்று வெங்கடேஷ் ஐயப்பன் பாடி முடித்த அந்த பஜனையில் எங்களோடு மலையேறிக் கொண்டிருந்த ஏனைய ஐயப்ப பக்தர்களும் நின்று வழிபட்டு அந்த பஜனையில் ஐக்கியமாகியிருந்தார்கள்.

பாடல் தொடர்ந்தது.

‘‘சித்திரை பல்லக்கில் ஏறி வந்தாள் … அவள்
சிங்காரமாகவே ஆடி வந்தாள்
முத்துப் பல்லக்கினில் ஏறி வந்தாள்… அவள்
முந்தை வினை நீக்க ஓடி வந்தாள்

தேவி கருமாரியம்மா தேடி வந்தோம் உன்னையம்மா
ஆவலுடன் உனைப் பணிந்தோம் நாவாரப் பாடவந்தோம்
ஆவலுடன் உனைப்பணிந்தோம் நாவாரப் பாடவந்தோம்’’

என பஜனையை நிறைவு செய்தார் வெங்கடேஷ் ஐயப்பன்.

எத்தனையோ ரகசியங்களை உள்ளடக்கியிருக்கும் இந்த கரிமலை, கரிமலை வாசன் ஐயப்பனை வழிபட செல்லும் பக்தர்களை தன் சிரமேற்று தாங்கி கொண்டிருக்கிறது.

மலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தர்கள் குழுவுக்கும் சோதனைகள் ஒவ்வொரு விதமாக ஏற்படும். அப்படியொரு சோதனையில் தன் பக்தனை காத்து ரட்ஷித்தவள்தான் இந்த கரிமலை சுனை கார்த்திகாயினி தேவி அம்மன்.

அம்மன் இந்த இடத்தில் எப்படி உருப்பெற்றாள் என்பதற்குரிய காரணங்களை, குருநாதர் சொல்ல தொடங்கியிருந்தார். ஆவலாக அவரது முகம் பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களின் முகத்தில் எல்லாம் அத்தனை அத்தனை ஆச்சரியங்கள் நெகிழ்ச்சி. அம்மனின் அற்புதங்களை வார்த்தைகளால் விவரித்து அவர் சொல்ல சொல்ல, வியப்பு மேலிட்ட என்னுள் அத்தனையும் காட்சியாக விரிந்துகொண்டிருந்தது.

அவர் கூறியபடி, தன்னுள் நிரம்ப நிரம்ப தெய்வ சக்தியை நிரப்பி வைத்திருக்கும் கரிமலையில், இரவில் தனியே சிக்கித் தவித்த திண்டாடிய அந்த ஐயப்ப பக்தருக்கு அம்மன் அருள் பாலித்தாளா?

அதற்குமுன்,

சில நிகழ்வுகளுடன் நினைவுகளை, சற்றே பின்னோக்கி திருப்பி சின்னதாக சிதம்பரம் வரை பயணித்து திரும்பலாம். வாருங்கள்.

- ஜி.காந்தி ராஜா | தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

| காட்டு வழிப் பயணம் தொடரும் |

முந்தைய அத்தியாயம்: ‘சுமடுவை காத்த ஐயப்பன்!’ - சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 3

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x