Published : 07 Aug 2024 03:00 PM
Last Updated : 07 Aug 2024 03:00 PM
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மகாதானபுரம் ஊராட்சி தெற்கு மேட்டுமகாதானபுரத்தில் உள்ளது ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்தக் கோயில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. இக்கோயிலில் ஸ்ரீ ராமசாமி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ வீரபத்ரர், ஸ்ரீ கால பைரவர் சந்நிதிகள் உள்ளன.
பல நூறாண்டுகளுக்கு முன் இப்பகுதி மேய்ச்சல் நிலமாக இருந்தபோது, கால்நடைகள் குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்ததால், அந்த இடத்தை அப்பகுதி மக்கள் மண்வெட்டியால் தோண்டிப் பார்த்தபோது, பூமிக்கு அடியில் சுயம்புவாக மகாலட்சுமி அம்மன் சிலை வெளிப்பட்டது. அப்போது, மண்வெட்டி பட்டதால் சுயம்பு மகாலட்சுமியின் இடது காது சேதமடைந்த நிலையில் உள்ளது. பின்னர், அந்தச் சிலையை நிறுவி, கோயில் கட்டி பூஜைகள் செய்து வந்தனர்.
பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் நடைபெறும். சுயம்புவாக அம்மன் வெளிப்பட்டது ஆடிப்பெருக்கு நாளாக அமைந்ததால், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்குக்கு மறுநாளான ஆடி 19-ம் தேதி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இதற்காக பக்தர்கள் ஆடி முதல் நாள் தொடங்கி 18 நாட்களுக்கு விரதம் இருந்து, ஆடிப்பெருக்கு நாளன்று அம்மனை காவிரியில் நீராட்டி, ஆடி 19-ம் நாள் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காயை உடைத்து மகாலட்சுமி தாயாரை வழிபடுவார்கள். இப்படி செய்தால், தேங்காய் சிதறுவதுபோல, தங்களின் பிரச்சினைகளும் சிதறிப்போகும், வேண்டுதலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டும் இந்த வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT