Published : 07 Aug 2024 05:09 AM
Last Updated : 07 Aug 2024 05:09 AM

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆடிப்பூர தேரோட்டம்: ஸ்ரீரங்கம், அழகர்கோவிலில் இருந்து பட்டு வஸ்திரம் வருகை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 7) ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும்மதுரை அழகர்கோவிலில் இருந்துஅனுப்பிவைக்கப்பட்ட பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின்போது ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அதேபோல, மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரைத் தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை ஆகியவற்றின்போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை,பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும்.

அதற்கு மறுசீராக ஆடிப்பூர தேரோட்டத் திருவிழாவில் ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் உடுத்தி களைந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பிவைக்கப்படும். ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தின்போது, திருப்பதி பெருமாள் உடுத்தி களைந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம், மாலை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவரப்பட்டன.

இவை இன்று காலை மூலவருக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்புபூஜைகள் நடைபெறும். பின்னர்தேரில் எழுந்தருளும் ஆண்டாள்,ரெங்கமன்னாருக்கு அழகர்கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட மங்கலப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x