Published : 05 Aug 2024 04:30 AM
Last Updated : 05 Aug 2024 04:30 AM

ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம்

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சார்பில், கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கும், தங்களது முன்னோர்களுக்கும் ஏராளமானோர் பட்டினப்பாக்கம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் கடற்கரை, கோயில் தெப்பக்குளம் உட்பட பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் குவிந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாளாக அமாவாசை கருதப்படுகிறது.

அதிலும், ஆடி, புரட்டாசி (மகாளயம்), தை மாதங்களில் வரும் அமாவாசை நாள், கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆடி அமாவாசையான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமானோர் திரண்டு, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அதிகாலை முதலே ஏராளமானோர் திரண்டனர். கடலில் நீராடிவிட்டு, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, சூரிய பகவானை வழிபட்டனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் தெப்பக்குள கரைகளிலும் காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கான சடங்குகளை புரோகிதர்கள் செய்து வைத்தனர். செங்குன்றம் புழல் ஏரிக்கரை பகுதியிலும் ஏராளமானோர் தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றி, முன்னோரை வணங்கினர். பலரும் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். வீடுகளில் முன்னோர்களின் படங்களுக்கு முன்பு படையலிட்டு வழிபாடு செய்தனர். பலரும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம், ஆடைதானம் வழங்கினர்.

நிலச்சரிவில் இறந்தோருக்கு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தும் கேரள மக்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் தர்ப்பணம் செய்தனர்.

நடிகர் ஜெயராமின் மனைவி பார்வதியும் மெரினா கடற்கரைக்கு வந்து, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x