Published : 04 Aug 2024 08:24 AM
Last Updated : 04 Aug 2024 08:24 AM
கோவை மாவட்டம் துடியலூரில் இருந்து பன்னிமடையை அடுத்த வரப்பாளையம் கிராமம் அருகே இயற்கைச் சூழலில் மலைகளின் நடுவில் பொன்னூத்தம்மன் கோயில் அமைந்துள்ளது.
இங்கு பொன்னூத்தம்மன் ஒரு சிறிய குகையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு அருகில் நந்தி இருப்பது இங்கு மட்டுமே. முன்னொரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி பொன்னம்மா, கால்நடைகளை வேட்டையாட வந்த நரிக்கு பயந்து அங்குள்ள குகைக்குள் சென்று தஞ்சம் அடைந்தார்.
சிறுமியைத் தேடி வந்த மக்கள் குகைக்குள் சென்று பார்க்க, பொன்னம்மா சுயம்பு வடிவில் அம்மனாக மாறி காட்சியளித்துள்ளார்.
பிற்காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட போது கனவில் வந்த பொன்னம்மா, தான் சுயம்புவாக இருக்கும் இடத்தின் பின்னால் ஊற்று இருப்பதாகக் கூற, அங்கு சென்று தோண்டிய போது ஊற்று பெருக்கெடுத்து ஓடியது. கிராம மக்களின் தாகத்தை தீர்த்த பொன்னம்மாவை ‘பொன்னூத்தம்மன்’ என அழைத்து வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயிலில் ஆலமரத்தின் கீழ் விநாயகர் வீற்றிருக்கிறார். முருகன், சிவன், ஆஞ்சநேயர் தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றனர். நவக்கிரக சந்நிதியும், பாறை குகையால் உருவாகிய தியான பீடமும், குகைக்கு அருகில் சிறிய அருவியும் உள்ளது. பொன்னூத்தம்மனை வேண்டினால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை வேண்டி இங்குள்ள பூவரசு மரத்தில் தொட்டில் கட்டுவோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பொன்னூத்தம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT