Published : 04 Aug 2024 12:28 PM
Last Updated : 04 Aug 2024 12:28 PM

ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் நீராடல்

ஆடி அமாவாசை

ராமேசுவரம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை இரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம், தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் ராமேசுவரம் வரத் தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தொடர்ந்து சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. 9 மணியளவில் பர்வதவர்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

11 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன், மற்றும் அனுமருடன் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து , ராமநாதசுவாமி கோயிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக ராமேசுவரத்தில் சிறப்பு நகரப் பேருந்துகளும், ராமேசுவரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப்பட்டினம் மற்றும் வைகை நதி நீர்நிலைகளிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x