Last Updated : 02 Aug, 2024 06:36 PM

 

Published : 02 Aug 2024 06:36 PM
Last Updated : 02 Aug 2024 06:36 PM

தருமபுரம் ஆதீன திருமடத்துக்கு அழைத்து வரப்பட்டது ‘ஞானாம்பிகை’ யானை!

தருமபுரம் ஆதீன திருமடத்துக்கு தானமாக வழங்கப்பட்ட யானை ஞானாம்பிகைக்கு, தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை.

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்கு தானமாக வழங்கப்பட்ட யானை ‘ஞானாம்பிகை’ பாதுகாப்பு குழுவுடன் இன்று திருமடத்துக்கு அழைத்துவரப்பட்டது.

மயிலாடுதுறை அருகே உள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஏற்கெனவே இருந்த யானை பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தது. புதிதாக யானை வாங்குவதற்கு மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளின் காரணமாக, இதுவரை ஆதீன மடத்தில் யானை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், யானைகளை பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கு மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அனுமதியளித்தது.

இதையடுத்து திருச்சி சமயபுரத்தில் இருந்த 34 வயதுடைய லக்கிமணி என்ற பெண் யானையை, தருமபுரம் ஆதீனத்துக்கு தானமாக தருவதற்கு யானையின் உரிமையாளர் சங்கர் என்பவர் முன்வந்தார். இதற்காக, தருமபுரம் ஆதீன மடத்தில் யானை கொட்டகை கட்டப்பட்டு, வனத் துறையினரிடம் உரிய அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, சமயபுரம் யானைக்கு, தருமபுரம் ஞானாம்பிகை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இன்று தருமபுரத்துக்கு வரவழைக்கப்பட்டது.

தருமபுரம் ஆதீன திருமடத்துக்கு தானமாக வழங்கப்பட்ட யானை ஞானாம்பிகை.

ஆதீன வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட யானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அங்கிருந்து பசு, குதிரை, ஒட்டகம் ஆகிய மங்கல சின்னங்களுடன் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் யானை ஞானாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் மாவட்ட யானைகள் பாதுகாப்பு குழுத் தலைவர் சிவகணேசன், வனவர் செல்லையன், தருமபுரம் வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x