Published : 02 Aug 2024 03:23 PM
Last Updated : 02 Aug 2024 03:23 PM
கும்பகோணம் அருகே உள்ள ஐவர்பாடி என்றழைக்கப்படும் அய்யாவாடியில் பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. 4 சிம்மம் பூட்டிய ரதத்தில், 18 கைகளுடன், சிம்ம முகத்தில் லட்சுமி சரஸ்வதியோடு பிரத்தியங்கிரா தேவி இங்கு காட்சி தருகிறார். இவர், சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது.
‘பத்ரம்’ என்றால் ‘மங்கலம்’ என்பது பொருள். பக்தர்களுக்கு என்றும் மங்கலத்தையே அளிப்பவர் ஆதலால், இவருக்கு பத்ரகாளி என்ற பெயர் உண்டு. இந்த பத்ரகாளி அம்மனே பிரத்தியங்கிரா தேவியும் ஆவார்.
ப்ரத்தியங்கிரஸ், அங்கிரஸ் என்னும் இரு ரிஷிகள் இக்காளியின் மந்திரத்தை கண்டுபிடித்ததால், இவர்களது பெயர்களை இணைத்து பிரத்தியங்கிரா தேவி என அழைப்பதாக கூறுவதுண்டு. எள்ளும், புஷ்பமும் கொண்டு பூஜிப்பதால் ஆனந்தம் அடைவார்.
பகைவர்களை நாசம் செய்பவர்; பில்லி, சூன்யம், ஏவல் போன்ற மந்திர தந்திரங்களைத் தூள் தூளாகச் செய்பவர்; மூன்று கண்கள் உடைய இவரை, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
பஞ்சபாண்டவர்கள், பிரத்தியங்கிரா தேவியை வேண்டி தவமிருந்து வழிபட்டு இழந்த கவுரவம், செல்வம், ராஜாங்கத்தை மீட்டெடுத்தார்கள் என்றும் கூறப்படுவது உண்டு. இங்கு நடக்கும் நிகும்பலா யாகத்தில் பங்கேற்றால், இழந்த பதவி மீண்டும் கிட்டும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்பு உருவாகும். வியாபாரம் செழிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT