Published : 31 May 2018 10:51 AM
Last Updated : 31 May 2018 10:51 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 33: ஊர் புகுவோர் ஊர் புகுக

மிழை மையமாக வைத்துக்கொண்டு யார் தமிழர் என்று பல தினுசுகளில் வரையறுக்கப்படுவதுபோல, சிவத்தை மையமாக வைத்துக்கொண்டு யார் சைவர் என்பதும் பல தினுசுகளில் வரையறுக்கப்பட்டிருந்தது.

திருநீறு, உருத்திராக்கம் ஆகிய சிவச் சின்னங்கள் பூண்டு சிவவேடம் தரித்தவர்கள்தாம் சைவர்கள் என்றால், சிவவேடம் இவற்றுடன் நின்றுவிடுகிறதா? கையில் கபாலம் ஏந்துதல், மண்டையோட்டு மாலை புனைதல் போன்றவை சிவ வேடம் ஆகாதா? பிட்சாடனக் கோலத்தில் உடையேதும் இன்றிக் ‘கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்’ நக்கனாகத் திரிந்த சிவனைப்போலத் திரிவது சிவ வேடம் ஆகாதா?

சிவத் தீட்சை பெற்றவர்தாம் சைவர் என்றால் நாயன்மார்களில் பாதிப் பேர் சிவத்தீட்சைப் பெறவில்லையே, அவர்களைத் தள்ளிவிடலாமா? குலப் பிறப்பாளர்தாம் சைவர் என்றால் நந்தனாரைக் கொளுத்திவிடலாமா? புலால் உண்ணாதவர் சைவர் என்றால் தானும் புலால் உண்டு அதையே தன் தலைவனுக்கும் படைத்த ஒப்பிலா அன்புடைய கண்ணப்பனைக் கைகழுவி விடலாமா? சைவத் திருமுறைகளை நாளும் ஓதுகிறவர்கள், சைவச் சடங்குகளை நாள் தவறாமல் செய்கிறவர்கள்தாம் சைவர்கள் என்றால் சாக்கிய நாயனார் சைவ நீக்கம் செய்யப்பட்டுவிட மாட்டாரா?

காந்தியம் கதர் மட்டுமா

இவையெல்லாம் புற அடையாளங்கள். இவையா ஒரு சைவனை அடையாளம் காட்டும்? ஆம் என்றால், ‘காந்தியர் என்பவர் யாரெனில் நாளும் கதர் அணிபவர்தாம்’ என்று சொல்வதற்கு நிகர் இல்லையா அது? காந்தியம் என்பது கதர் மட்டுந்தானா?

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துஉறுப்பு அன்புஇல் அவர்க்கு.(குறள் 79)

மனித உடம்பு கன்ம இந்திரியங்கள் என்று சொல்லப்படுகிற ஐந்து தொழிற் கருவிகள் உடையது. கருத்துப் பரிமாறப் பேச்சுத் தொழில் செய்வதற்கு வாய், கொடுத்து அறத் தொழில் செய்வதற்குக் கைகள், நடந்து இடம் பெயரும் தொழில் செய்வதற்குக் கால்கள், கழிவை வெளியேற்றும் தொழில் செய்வதற்கு எருவாய், இனப் பெருக்கும் தொழில் செய்வதற்குக் கருவாய். அறத் தொழில் செய்யவே புறத்து உறுப்புகள். ஆனாலும் அகத்து உறுப்பாகிய அன்பு தூண்டாவிட்டால், புறத்து உறுப்புகள் என்ன செய்யும்? அவற்றால் என்ன பயன்?

‘ஆஜானுபாகு’ என்று வடமொழியில் ஒரு சொல்வழக்கு. முழங்கால்வரை நீண்ட கைகள் என்று பொருள். நீண்ட அகன்ற கைகள் இருந்தால் நிறைய அள்ளிக் கொடுக்கலாந்தான்; பெருவீச்சாக வாள் வீசலாந்தான். ஆனால் அள்ளிக் கொடுப்பதற்கும் பெருவீச்சாய் வீசுவதற்கும் அகம் துணியாவிட்டால், புறம் ஆஜானுபாகுவாக இருந்து என்ன பயன்?

கண்டது வேறென்ன

கொடைக்கு அடையாளம் நீளமான கைதான் என்றால் உலகின் மிகப்பெரிய கொடையாளியாக யானைதான் இருக்கும். எவ்வளவு நீளத் தும்பிக்கை அதற்கு? அவ்வளவு நீளத் தும்பிக்கையை வைத்து அது வாங்கும் தொழில்மட்டும் செய்கிறதே ஒழியக் கொடுக்கும் தொழில் செய்வதில்லை.

இருகை யானையை ஒத்திருந்து என்உளக்

கருவை யான்கண்டி லேன்; கண்டது எவ்வமே!

வருக என்றுப ணித்தனை; வான்உளோர்க்கு

ஒருவ னே!கிற்றிலேன்! கிற்பன் உண்ணவே!

(திருவாசகம், திருச்சதகம், 41)

-என்று தன்னை இருகை யானையாக உருவகித்துப் பாடுகிறார் மாணிக்கவாசகர். யானைக்கு ஒரு கை; தன் ஒற்றைக் கையால் எடுத்துத் தின்கிறது; நெற்றியில் கையிட்டு வணக்கம் வைக்கிறது. எனக்கோ இரு கைகள். என் இரு கைகளாலும் எடுத்துத் தின்றேன்; கும்பிட்டு வணக்கம் வைத்தேன். என் இறைவா! ‘உனக்குள்ளே இருக்கிறேன் வா, வா’ என்று என் மனத்துக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்! வந்தேனா? இல்லையே? அள்ளி அள்ளித் தின்றேன்! அடங்காது துன்புற்றேன்! கண்டது வேறென்ன?

ஓர் ஆளின் சாரத்தை அவனுக்குப் புறத்தில் இருப்பனவா தீர்மானிக்கின்றன? அகத்தில் இருப்பதல்லவா? வேடமும் சடங்குகளுமா ஒருவரை அடையாளம் காட்டுகின்றன? நெஞ்சு எங்கே நெக்குருகும், உள்ளம் எதனோடு இசைந்தோடும், அன்பு எப்போது கரை புரளும், இருதயம் யாருக்கு இதழ் மலரும் என்பன அல்லவா எவரையும் அடையாளம் காட்டுகின்றன?

திருமூலருக்கும் அதுதான் கருத்து. புற வேடங்களின் வழியாகச் சைவரை அடையாளம் காட்டிச் சண்டையிட்டுக் கொண்டிருந்த அனைவரையும் மறுதலித்து அக அடையாளத்தை முன்னிறுத்துகிறார் திருமூலர்:

பிறைஉள் கிடந்த முயலை எறிவான்

அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்

கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்;

நிறைஅறி வோம்என்பர், நெஞ்சிலர் தாமே.

(திருமந்திரம் 2512)

கண்டம் கறுத்த இறைவனைக் காணும் வகை தெரியாதவர்களே! எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்ததுபோல, ‘என் வழி தனி வழி’ என்று பிதற்றித் திரிகிற, நெஞ்சிலா மூடர்களே! ‘நிலாவிடத்தில் ஒரு கறை இருக்கிறது. அந்தக் கறை முயல்போல இருக்கிறது. பிறைக்குள் கறையாக இருக்கும் அந்த முயலை இங்கிருந்தே வெட்டுகிறேன் பார்’ என்று வாளை எடுத்து ஒருவன் வீசினால் அவன் மடையன் இல்லையா? இறைவனைச் சார்ந்து நிற்கும் வழி எது என்று தெரியாமல், ‘இதுதான் வழி; அதுதான் வரையறை’ என்று சொல்லித் திரிகிற நீங்களும் அவனையே போன்றவர்கள் இல்லையா?

இத்தவம் அத்தவம் என்றுஇரு பேர்இடும்

பித்தரைக் காணில் நகும்எங்கள் பேர்நந்தி;

எத்தவம் ஆகில்என்? எங்குப் பிறக்கில்என்?

ஒத்துஉணர் வார்க்குஒல்லை ஊர்புகல் ஆமே.

(திருமந்திரம் 1568)

இந்த நெறி, அந்த நெறி என்று வெவ்வேறு பெயரிட்டு இரண்டுபட்டு நின்று அடித்துக்கொள்கிறவர்களைக் கண்டால் எங்கள் இறைவன் சிரிப்பான். எந்த வழி வந்திருந்தால் என்ன? எங்குப் பிறந்திருந்தால் என்ன? உள்ளத்தில் ஒத்துணர்ந்தால் ஊருக்குள் புகலாம். ஊர் புகுவார் ஊர் புகுக; பேர் புகுவார் பேர் புகுக.

(மெய் காண்போம்...)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x