Published : 01 Aug 2024 02:24 PM
Last Updated : 01 Aug 2024 02:24 PM
சேலம், அம்மாபேட்டை பிரதான சாலையில் 400 ஆண்டுகால பழமையான பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தயிர் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி, தன் கூடையில் மாரியம்மன் சிலையை சுமந்து கொண்டு செல்ல, செல்லும் வழியில், இளைப்பாறுவதற்காக அம்மாப்பேட்டை பகுதியில் அதை கீழே வைக்க, அச்சிலையை அவரால் அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அதன்பின் அம்மனை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ய, பக்தர்களுக்கு தொடர்ந்து அருள்பாலித்து வருகிறாள்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி, ஆனி, ஆடித் திருவிழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி நன்னாள் என விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
ஜூலை 23-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய ஆடித் திருவிழாவில் ஆக.7-ம் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்வும், அதைத் தொடர்ந்து உருளுதண்டம், பூமிதித்தல் நிகழ்வும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு, 13-ம் தேதி பால்குட ஊர்வலத்துடன் ஆடித் திருவிழா நிறைவுறுகிறது.
பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வந்து வேண்டுதல் வைத்து வழிபாடு நடத்திச் செல்வது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பம்சம். திருமணத்தடை, சரும நோய், கண் நோய் என சகலவித நோய்களை தீர்த்து பக்தர்களை கருணை உள்ளத்தோடு காப்பாற்றி வரும் பலப்பட்டரை மாரியம்மனை அனைத்து சமூக மக்களும் போற்றி, கொண்டாடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment