Last Updated : 30 Jul, 2024 03:07 PM

 

Published : 30 Jul 2024 03:07 PM
Last Updated : 30 Jul 2024 03:07 PM

வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் ஆடிக்குண்டம் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

கோவை: கோவையில் பிரசித்திப்பெற்ற வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாட்டனர்.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23-ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து, ஆடிக்குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்வு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கோயிலை வலம் வந்து பின்பு குண்டம் அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்தடைந்தது. பின்பு, சரியாக காலை 5.30 மணிக்கு குண்டம் இறங்குதல் வைபவம் தொடங்கியது.

தலைமைப் பூசாரி ஹரி, சிறப்பு பூஜைகளை செய்த பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு முதலில் தலைமைப் பூசாரி குண்டம் இறங்கினார். அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்எல்ஏ-வான ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மேயருமான செ.ம.வேலுச்சாமி, போலீஸார் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம் எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

குண்டம் இறங்குதல் வைபவத்தையொட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி-யான சுரேஷ்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குண்டம் இறங்கும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x