Published : 30 Jul 2024 04:12 AM
Last Updated : 30 Jul 2024 04:12 AM

ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்: பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்

ஆடி கிருத்திகையையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவர். (அடுத்த படம்) சுவாமி தரிசன ம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் . | படங்கள்: ம.பிரபு |

சென்னை: ஆடி கிருத்திகையையொட்டி, வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

வடபழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு பள்ளியறை பூஜைகள் நடந்தது.

இதையடுத்து, காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சந்தனகாப்பு அலங்காரம், உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ அலங்காரம் மூலவருக்கு செய்யப்பட்டிருந்தது. சாயரக் ஷை பூஜை, அபிஷேகம் முடிந்ததும், மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து இரவு, வள்ளி, தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள், பால் குடம் ஏந்தி, காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.

முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சுவாமி தரிசனம் செய்ய தனி வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. அதேபோல், காவடி, பால் குடம், அலகு குத்தி வரும் பக்தர்களுக்கும் தனி வழி அமைக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல, பாரிமுனை கந்தகோட்டம், குரோம்பேட்டை குமரன் குன்று, குன்றத்தூர் முருகன், பெசன்ட்நகர் அறுபடை வீடு முருகன், வானகரம் மச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் ஆகிய கோயில்களிலும் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x