Published : 29 Jul 2024 11:16 AM
Last Updated : 29 Jul 2024 11:16 AM
கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை) மாலை நேத்திர புஷ்கரணியில் தெப்பத் திருவிழா, வேதபாராயணம், மங்கள வாத்தியங்களுடன் நடைபெற உள்ளது. இதையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமைந்ததும், தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்றதுமான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தங்கக்கவசம், வைரவேல் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிநாத சுவாமியை அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று மாலை நேத்திர புஷ்கரணியில் தெப்பத் திருவிழா, வேத பாராயணம், மங்கள வாத்தியங்களுடன் நடைபெற உள்ளது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிநாத சுவாமி வழிபாட்டு டிரஸ்ட் சார்பில் இன்று மாலை அருளுரை வழங்கும் நிகழ்ச்சியும், சிவதாண்டவம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைபுரிந்த பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட்டன. சுவாமிமலை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகளை செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT