Published : 25 Jul 2024 02:41 PM
Last Updated : 25 Jul 2024 02:41 PM
சென்னையின் மையப்பகுதியாக திகழும் தியாகராயர் நகரில் (மாம்பலம்) கோயில் கொண்டு, முப்பாத்தம்மன் அருள்பாலித்து வருகிறார். ஒருகாலத்தில், தற்போதைய பனகல் பூங்காவின் பின்புறத்தில் வயல்கள் நிறைந்து காணப்பட்ட பகுதியில், விவசாயிகள் நெல், வாழை, காய்கறி, பூச்செடிகள் மற்றும் பழம் தரும் மரங்களை விதைத்தனர், இப்பகுதியில் வேப்ப மரம், அரச மரம் அருகில் பாம்பு புற்று ஒன்றை அடையாளம் கண்ட அவர்கள், தங்கள் வழிபாட்டை அங்கு தொடங்கினர்.
அதே இடத்தில் அம்மன் விக்கிரகம் ஒன்றும் கண்டெடுக்கப்பட, அதை புற்றின் அருகே பிரதிஷ்டை செய்து, மக்கள் வழிபடத் தொடங்கினர். முப்போகமும் விளையும் நிலத்தில் இருந்து அம்மன் விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டதால், அம்மன் ‘முப்பாத்தம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
‘முப்பாத்தம்மனை வேண்டி, ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு, அமோக விளைச்சலை அம்மன் அருளினார். வெட்டவெளியில் இருந்த சந்நிதிக்கு முதலில் கூரை அமைக்கப்பட்டது. பின் மண்டபம் எழுப்பி, சந்நிதிக்கு விமானம் அமைத்து, பரிவார தேவதைகளை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு வைபவமும் நடைபெற்றது. தற்போது ஐந்தாவது தலைமுறையாக வழிபாடு நடைபெற்று வருகிறது.
300 ஆண்டுகள் பழமையான கோயிலில் சூலம், சிம்மத்தின் எதிரே கருவறையில் முப்பாத்தம்மன் அமர்ந்த கோலத்தில் பின்னிரு கரங்களில் உடுக்கை, பாசம், முன்னிரு கரங்களில் சூலம், கபாலம் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார். சுற்றியுள்ள சிறிய கோயில்களில் முப்பாத்தம்மனின் உத்தரவுக்குப் பிறகே உற்சவங்கள் தொடங்குகின்றன. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர். 365 நாட்களும் இக்கோயில் விழாக் கோலம் பூண்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT