Last Updated : 03 May, 2018 11:56 AM

 

Published : 03 May 2018 11:56 AM
Last Updated : 03 May 2018 11:56 AM

கூவாகம் அரவான் திருவிழா: அரவான் பலி மோகினிகளின் வலி

 

சி

த்திரைத் திருவிழாவின் ஓர் அங்கமாக விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் விழா திருநங்கைகளின் அடையாளத்துக்கான விழாவாக மாறியுள்ளது. இந்தியா முழுவதுமிருந்து திருநங்கைகள் அன்றைய தினத்தில் கூவாகத்தில் சமீபத்திய ஆண்டுகளில் சங்கமிக்கின்றனர்.

பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறவேண்டுமானால், சகல லட்சணமும் பொருந்திய ஒரு வீரனைப் பலி தர வேண்டும் என்று ஆருடம் கூறப்படுகிறது. பாண்டவர்கள் தரப்பில் அதுபோன்ற சகல லட்சணம், அர்ஜுனனுக்கும், அவருடைய மகன் அரவானனுக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் மட்டுமே உள்ளது. இந்நிலையில் குருசேத்திரப் போருக்கு அர்ஜுனனும் கிருஷ்ணரும் முக்கியமானவர்கள் என்பதால், அர்ஜுனனின் மகன் அரவானைத் தேர்வுசெய்து, பலிக்கு ஆயத்தப்படுத்துகின்றனர்.

அப்போது முதலில் சம்மதிக்க மறுத்த அரவான், பின்னர் ஒருவழியாகச் சம்மதிக்கிறார். பலி கொள்ளப்படும் வீரன் தாம்பத்திய அனுபவம் இல்லாமல் இறக்கக் கூடாது என்பதற்காகத் திருமணமும் செய்யத் திட்டமிடப்படுகிறது. ஒருநாள்தான் அரவானுக்குத் திருமண வாழ்க்கை.
 

03chsrs_aravan1 கூத்தாண்டவர்

ஒருநாள் இல்லறம் நடத்திவிட்டு இறக்கப் போகிறவனுக்கு எப்படி கழுத்தை நீட்டுவது? என்றுகூறி எந்தப் பெண்ணும் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாத சூழ்நிலையில், கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்வு கண்டு, அரவான் பலிகளம் புகுந்தார். கணவனை இழந்த மோகினி விதவைக் கோலம் தரித்தாள்.

மோகினியுடன் அடையாளம் கண்ட திருநங்கைகள்

ஆடவரான கிருஷ்ணரின் அவதாரமாகி விதவையாகும் மோகினியுடன் திருநங்கைகள் அடையாளம் கண்டு விதவைக் கோலம் பூணும் நாள் தான் கூவாகம் சித்திரைத் திருவிழா நிகழ்வு. தமிழகத்தின் வடமாவட்டங்களில் திரௌபதி வழிபாட்டு மரபிலும் அரவான் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

தமிழகத்தில் தைப்பூசத்தன்று பழனிக்குச் செல்வது போல, ஒவ்வொரு திருநங்கையரும் கூவாகம் கூத்தாண்டவர் சித்திரைத் திருவிழாவில் பங்குபெறுவதை வாழ்நாள் கடமையாகக் கருதுகின்றனர். முந்தைய நாள் பூசாரியின் கைகளால் தாலி கட்டிக்கொண்டு, விடிய விடிய ஆடல் பாடல் என சந்தோஷத்தை அனுபவித்து, விடிந்ததும், அரவான் சூறைவிடுதலுக்குப் பின் தாலி அறுத்து, சோகத்துடன் ஊர் திரும்புகின்றனர்.

ஒன்று கூடும் பண்டிகை

இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஆண்டு முழுவதும் சம்பாதித்த பணத்தைச் சேமித்து, ஒரு வாரத்துக்கு முன்னரே விழுப்புரம் நகரில் ஓட்டல்களில் அறை எடுத்துத் தங்கி, அந்த ஒரு வாரம் முழுக்க விழுப்புரம் நகரத்தில் பல்வேறு ஒப்பனைகளுடன், அலங்கரித்துக்கொண்டு, விதவிதமான சேலைகளை அணிந்து வீதிகளில் இவர்கள் வலம்வருவார்கள். தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவியும் திருநங்கைகள் தங்களது நண்பர்கள், தோழிகள், உற்றார் உறவினர்கள் என அனைவரையும் ஒரே நேரத்தில் சந்தித்து மகிழும் விழாவாகவும் இதைப் பார்க்கின்றனர்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி மே 1 அன்றும், அரவான் பலியிடுதல் மே 2 அன்றும் நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் தங்களைப் புதுமணப்பெண்களைப்போல் அலங்கரித்துக்கொண்டு, கோயில் பூசாரியின் மூலம் தாலி கட்டிக் கொண்டு, கற்பூரம் ஏற்றிக் கூத்தாண்டவரை வழிபட்டு, கோயிலின் வெளியே கும்மியடித்து, இரவு முழுவதும் ஆடிப்பாடினார்கள். அதிகாலையிலேயே தாலி அறுத்தல் சடங்கில் ஈடுபட்டு அவர்கள் அழுத நிகழ்வைப் பார்த்தபோது அவர்களது வாழ்க்கைத் துயரமும் அதில் கலந்தேயிருந்தது.

கோயில் படங்கள்: எஸ்.சாம்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x