Last Updated : 19 Jul, 2024 08:19 PM

 

Published : 19 Jul 2024 08:19 PM
Last Updated : 19 Jul 2024 08:19 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தை டிசம்பருக்குள் புதுப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தை டிசம்பர் மாதத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை புது மாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணி பாரதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்குப் பகுதியில் கி.பி 1628-ம் ஆண்டு முதல் 1635-ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் கருங்கற்களால் கட்டப்பட்ட புது மண்டபம் உள்ளது. அழகிய கலைநயத்துடன் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் 25 அடி உயரத்திலும் 333 அடி நீளத்திலும் 105 அடி அகலத்திலும் புது மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 124 கலைநயமிக்க தூண்கள் உள்ளன.

மேலும், மண்டபத்தில் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட சுவாமி சிலைகளும் உள்ளன. ஆரம்ப காலக்கட்டத்தில் புது மண்டபம் பகுதியில் ஆவணி மூலத் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பின்னர் புது மண்டபத்தில் வணிக ரீதியாக 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்தக் கடைகள் புது மண்டபத்திலிருந்து குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, கலைநயம் மிக்க புது மண்டபத்தில் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பழமை மாறாமல் மறு சீரமைப்பு பணி மேற்கொண்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் பார்வைக்கு திறக்க வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.

இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மதுரை மீனாட்சியம்மன் கோயிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை. புதுமண்டபத்தை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. அதன் பிறகும் புது மண்டபத்தை புதுப்பிக்க ஏன் கால தாமதம் ஆகிறது?” எனக் கேள்வி எழுப்பினர்.

தொல்லியல் துறை சார்பில், "புது மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆறு மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உட்பட்ட புதுமண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x