Published : 19 Jul 2024 01:36 PM
Last Updated : 19 Jul 2024 01:36 PM
கும்பகோணம்: ஆடி மாதத்தின் முதல் வெள்ளியையொட்டி, கும்பகோணம் கோட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆடி மாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு சிறப்பான நாளாகும். ஆடி வெள்ளியில் பெண்கள் ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். அதனால் ஆடியில் திருமணம் ஆன பெண்கள் அம்மன் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்மனைத் தரிசனம் செய்ய விரதமிருப்பது வழக்கம்.
அதன்படி, இன்று நடப்பாண்டின் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராகு கால நேரத்தில் உற்சவ துர்க்கையம்மனுக்கு பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
இதேபோல் கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ராகுகால காளியம்மன், திருநல்லூரில் உள்ள காளியம்மன், சன்னாபுரத்தில் உள்ள வடபத்திரகாளியம்மன், உத்தாணி பொன்னியம்மன், கருப்பூரில் உள்ள பெட்டிகாளியம்மன், உடையாளூர் செல்வமகாகாளியம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலுள்ள துர்க்கையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT