Published : 18 Jul 2024 05:03 PM
Last Updated : 18 Jul 2024 05:03 PM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப் பகுதியில், திண்டுக்கல் - மைசூரு தேசிய நெடுஞ் சாலையில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பண்ணாரியைச் சுற்றியுள்ள கிராம மக்கள், தங்கள் மாடுகளை, மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். அப்போது பட்டியில் உள்ள ஒரு பசுமாடு மட்டும், தோரணப்பள்ளம் என்ற ஓரிடத்தில் நிற்பதும், அங்கு அதன் மடியிலிருந்து பால் தானாகவே சொரிவதையும் கிராம மக்கள் கண்டுள்ளனர். அந்த இடத்தை தோண்டிப்பார்த்தபோது, அங்கு சுயம்பு வடிவ சிலை இருந்தது.
இதையடுத்து அந்த இடத்தில் கூரை அமைத்து, ‘பண்ணாரி மாரியம்மன்’ எனப் பெயரிட்டு வழிபாடு செய்யத் தொடங்கியதாக கோயில் தல வரலாறு கூறுகிறது. அதன்பின், 22 அடி அகலத்துக்கு சுற்றுப்பிரகார மண்டபம் மற்றும் தங்கரதம் சுற்றி வர 22 அடி அகல மண்டபம் என படிப்படியாக கோயில் விஸ்தரிக்கப் பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் பண்ணாரி மாரியம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கிழக்கு பகுதியில் சந்தான விநாயகரும், தென்மேற்கில் மாதேஸ்வரரும், மேற்குப்பகுதியில் தெப்பக்குளம் அருகே சருகுமாரியம்மன் ஆலயங்களும் அமைந்துள்ளன.
அம்மன் சந்நிதிக்கு அடுத்த மண்டபத்தில் மேற்கு பார்த்த முகமாய் பொம்மையராய சுவாமிகளும், மகா மண்டபத்தில் கிழக்கு பார்த்த முகமாய் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். ஆண்டுதோறும், பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில், தமிழகம் - கர்நாடகாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது பண்ணாரி மாரியம்மன் கோயிலின் தனிச்சிறப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT