Published : 16 Jul 2024 05:50 AM
Last Updated : 16 Jul 2024 05:50 AM

ஆடி மாதத்தையொட்டி ஜூலை 19-ல் தொடங்குகிறது: அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம்

சென்னை: ஆடி மாதத்தையொட்டி அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை ஜூலை 19-ம் தேதி இலவச ஆன்மிக பயணமாக அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் மயிலாப்பூ கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

இதேபோல், மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில் ராக்காயியம்மன் கோயில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், கோவை மண்டலத்தில் கோவை கோனியம்மன் கோயில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், சூலக்கல் மாரியம்மன் கோயில், கோவை தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில் வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில், திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோயில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இந்த ஆன்மிக பயணத்துக் கான முன்பதிவு தொடங்கி உள்ளது. ஜூலை 17-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மண்டல அலுவலகங்களில் பக்தர்கள் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஜூலை 19-ல் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் இலவச ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x