Published : 14 Jul 2024 12:45 PM
Last Updated : 14 Jul 2024 12:45 PM
சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவத்தில் இன்று காலை செப்பு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளின் அவதார நட்சத்திரம் திருவிழாவாக ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆண்டு ஆனி சுவாதி உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவில் தினசரி இரவு பெரியாழ்வார், ஆண்டாள், ஸ்ரீ ராமர், கண்ணன், பெரிய பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான செப்பு தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து செப்பு தேரில் (கோ ரதம்) எழுந்தருளினார்.
காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கி நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. திருப்பல்லாண்டு பாடியபடி வைணவ ஆச்சார்யர்கள் முன் செல்ல தேரோட்டம் நடைபெற்றது . ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் லட்சுமணன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT