Published : 31 May 2018 10:48 AM
Last Updated : 31 May 2018 10:48 AM
தி
பெத்தியக் கதை இது. அங்கே ஓர் இளைஞன் மறைஞானத்தில் ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். நிறைய ரகசியங்கள் தெரிந்தவர் என்று கேள்விப்பட்டு ஒரு ஞானியைப் போய்ப் பார்த்தான். ஆனால், அவரிடமிருந்து எந்த ரகசியத்தையும் அறிந்துகொள்ளவே முடியவில்லை.
“நான் வாழ்நாள் முழுவதையும் செலவழித்து அவருக்குத் தொண்டு செய்து அவரிடமுள்ள அறிவைப் பெறுவேன்” என்று சூளுரைத்தார். அந்த ஞானியுடனேயே தங்கிவிட்டான்.
“நீ உன் நேரத்தை வீண்டிக்கிறாய். என்னிடம் எதுவுமே கிடையாது. நான் ஒரு பழைய ஆத்மா. எனவேதான் நான் பேசாமல் இருக்கிறேன். மக்களோ நான் ஏதோ ரகசியத்தை ஒளித்து வைத்திருப்பதாக நினைக்கிறார்கள். எனக்குச் சொல்வதற்கு எதுவுமே இல்லை. அதனால் அமைதியாக இருக்கிறேன்” என்றார்.
ஆனால், அந்த இளைஞனோ, “என்னை அப்படியெல்லாம் நீங்கள் சமாதானப்படுத்த முடியாது. நீங்கள் அத்தனை மர்மங்களையும் திறக்கும் பெரும் ரகசியத்தை என்னிடம் சொல்லியே ஆகவேண்டும்” என்றான்.
சில ஆண்டுகள் கழிந்தன. அவனுடைய தொந்தரவை கிழவரால் பொறுக்கவே இயலவில்லை. அவனுக்கும் சேர்த்து அவர் உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. உடைகளையும் குளிருக்குப் போர்வைகளையும் தேட வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் அவரே நொந்துபோய், பிடிவாதமான அந்தச் சீடனைக் கூப்பிட்டார். “உனக்கு நான் இன்று அந்த ரகசியத்தைச் சொல்லப் போகிறேன். அது மிகவும் எளிமையானது” என்றார்.
திபெத்தில் பொதுவாகச் சொல்லப்படும் ‘ஓம் மணி பத்மே ஹம்’ என்றார். எல்லாம் இதில் மறைந்திருக்கிறது என்றார்.
ஆனால், அந்தச் சீடனோ, “என்னை ஏமாற்ற வேண்டாம். இந்த மந்திரம் எல்லாருக்கும் தெரியும். இதில் என்ன ரகசியம் உள்ளது? திபெத்தியர்கள் எல்லாருக்கும் தெரிந்த மந்திரம்தானே?” என்றான்.
ஞானியும் புன்னகை செய்தபடி, “நீ சொல்வது உண்மைதான். ஆனால், அவர்கள் யாருக்கும் அதைத் திறக்கும் சாவி தெரியாது. அதைத் திறக்கும் சாவி தெரியுமா உனக்கு?” என்று கேட்டார்.
“ஒரு மந்திரத்தைத் திறப்பதற்கு சாவி வேண்டுமா?” என்று அந்தச் சீடன் வியந்துபோனான்.
“ஆம். அதுதான் ரகசியம். ஐந்து நிமிடத்துக்கு இந்த மந்திரத்தைத் திரும்பத் திரும்ப உச்சரித்து முடிக்கும்வரை உனது மனத்தில் குரங்கு வரக்கூடாது.” என்றார் ஞானி.
“நீங்கள் முட்டாளா? எனது மொத்த வாழ்க்கையிலும் நான் குரங்கைப் பற்றி நினைத்ததே இல்லை. ஏன், நான் ஒரு குரங்கைப் பற்றி மந்திரத்தைச் சொல்லும் போது நினைக்க வேண்டும்?” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அந்த ஞானி வாழ்ந்த மலைக்கோயிலிலிருந்து இறங்கி அடிவாரத்துக்கு வந்தான். ஆனால், அவனது பயணம் முழுக்க குரங்குகள் வந்து அவனது மனத்தில் தோன்றி பல்லிளித்தபடி இருந்தன. அவன் கண்களை மூடினான். குரங்குகள் பலிப்புக் காட்டின. அவன் ஓடினான். குரங்குகள் கூட்டம்கூட்டமாக வந்தன. குரங்குகள் அவன் போய் அமர்ந்த இடத்திலெல்லாம் சர்க்கஸ் காட்டின.
“கடவுளே, இதுதான் அந்த மந்திரத்தின் சாவியென்றால், நான் தொலைந்தேன். எனது காத்திருப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை.”
பனி சில்லிடும் ஆற்றில் குளித்துவிட்டு தியானத்தில் அமர்ந்தால் குரங்குகள் போய்விடும் என்று நினைத்தான். தனது பூஜை அறையில் நறுமண பத்திகளை எரித்தான். பத்மாசனத்தில் அமர்ந்தான். குரங்குகள் எல்லா திசைகளிலிருந்தும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தன. குரங்குகள் இல்லாமல் ஒரு மந்திரத்தைக் கூட உச்சரிக்கவில்லை.
அடுத்தநாள் காலையில் தனது குருவிடம் சென்று பணிந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட சாவியை எடுத்துவிடுங்கள் என்று கதறியபடி கூறினான்.
“அதனால்தான் நான் அதை யாரிடமும் சொல்வதில்லை. நான் ஏன் மவுனமாக இருக்கிறேன் என்று இப்போது உனக்குப் புரிகிறதல்லவா” என்று கனிவுடன் கேட்டார்.
“உங்களிடம் ஒரு வார்த்தை பேசக் கூட எனக்கு விருப்பம் இல்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட சாவியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். இந்தக் குரங்குகளை என்னால் தாங்க முடியவில்லை” என்றான் சீடன்.
“நீ அந்தச் சாவியைத் திரும்பிக் கொடுத்துவிட்டால், அந்த மந்திரத்தை ஒருபோதும் திரும்பச் சொல்லாதே. மந்திரத்தைச் சொன்னால் குரங்குகள் வரும். அதற்குப் பிறகு உனது இஷ்டம்” என்றார்.
சீடன் அதற்குப் பிறகு மந்திரத்தைச் சொல்லவே இல்லை. சாவியும் போய்விட்டது. குரு இருக்கும் மலைக்கோயிலிலிருந்து இறங்கத் தொடங்கினான். அவன் கண்களை மூடினான். குரங்குகளே வரவில்லை. கண்களைத் திறந்து பார்த்தான். எங்கேயும் குரங்கே இல்லை.
ரொம்பவும் வினோதமாக இருக்கிறதே என்று நினைத்தான். இறங்கும் பயணத்தில் ‘ஓம் மணி பத்மே ஹம்’ என்று கண்களை மூடி ஒரே ஒரு முறை உச்சரித்தான்.
குரங்குகள் அனைத்து திசைகளிலிருந்தும் வரத் தொடங்கின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT