Published : 11 Jul 2024 03:55 PM
Last Updated : 11 Jul 2024 03:55 PM
சென்னை: திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், ஆலங்குடி, குருபகவான் திருக்கோயில் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கு நாளை (ஜூலை 12) குடமுழுக்கு நடைபெறும் என்று இந்துசமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) திருக்கோயில் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கு நாளை (ஜூலை 12) வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பணிகள், குடமுழுக்கு, திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைப்பு, திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 07.05.2021 முதல் 11.07.2024 வரை 1,856 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடமுழுக்கு நடைபெற்று 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி, ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் திருக்கோயில், ரூ.170.11 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வரும் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயில், ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் (குரு ஸ்தலம்) திருக்கோயில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்ற திருச்சி மாவட்டம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 65 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நாளை (ஜூலை 12) வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
குடமுழுக்கு நடைபெறும் திருக்கோயில்களில் சென்னை, சேத்துப்பட்டு, கருகாத்தம்மன் திருக்கோயில், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 திருக்கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்துமாரியம்மன் திருக்கோயில், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம், சுந்தர விநாயகர் திருக்கோயில், ஆகிய திருக்கோயில்களும் அடங்கும். இதற்கான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களும், திருக்கோயில் பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT