Published : 23 Jun 2024 05:39 PM
Last Updated : 23 Jun 2024 05:39 PM

நெல்லையப்பர் தேருக்கு வந்த சோதனை: அடுக்கடுக்கான கேள்விகளுடன் குமுறும் பக்தர்கள்

படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தின்போது 4 முறை வடங்கள் அறுந்ததால் 518 ஆண்டு காலம் இல்லாத அளவுக்கு மிகவும் தாமதமாக தேர்கள் நிலையம் சேர்ந்தன. அதிகாரிகள் பொறுப்பின்றி செயல்பட்டதாலேயே இந்த அவலம் நேர்ந்ததாக பக்தர்கள் குமுறுகின்றனர்.

திருநெல்வேலி நகரில் நடுநாயகமாக அமைந்துள்ள 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் ஆனித் திருவிழா தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை காண தினந்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தால் பிரகாரங்கள் மற்றும் ரத வீதிகள் களை கட்டும். முத்தாய்ப்பாக நடைபெறும் தேரோட்டத்தை காண திருநெல்வேலி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவார்கள்.

தமிழ்நாட்டில் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்களுக்கு அடுத்தபடியாக 3-வது பெரிய தேரானசுவாமி நெல்லையப்பர் தேர் முழுவதும் மனித சக்தியால் இழுக்கப்படும். 1505-ம் ஆண்டு இத்தேர் உருவாக்கப்பட்டது. இத்தேருக்கான அச்சுகள் லண்டனில் செய்யப்பட்டவை. 450 டன் எடையுடன் முதலில்13 அடுக்குகளாக இருந்த இந்த தேர், பாதுகாப்பு கருதி பின்னர் 9 அடுக்குகளாக குறைக்கப்பட்டது. தற்போது 5 அடுக்குகள் மட்டுமே கொண்டுள்ளது.

4 முறை அறுந்த வடங்கள்: 517 ஆண்டுகளாக இக்கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடந்துள்ளது. நடப்பாண்டு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழாகடந்த 13-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாளான நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்பி உள்ளிட்டோர் காலை 7.18 மணிக்குசுவாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள்வடம்பிடித்து இழுத்தபோது தேரில் கட்டப்பட்டிருந்த 3 ராட்சத வடங்கள் அறுந்தன. இதில் 2 பக்தர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து அம்பாள் தேரில் இருந்த வடத்தை கொண்டு வந்து கட்டி தேரோட்டம் மீண்டும்தொடங்கிய நிலையில், மீண்டும் வடம் அறுந்தது. இதனால் வாகையடி முனையில் நீண்ட நேரம் தேர் நின்றது. ஒரு வழியாக அங்கிருந்து பக்தர்கள் தேரை இழுத்த போது 3-வது முறையாக தேரின் வடம் அறுந்தது. பின்னர் இரும்பு சங்கிலி கட்டப்பட்டு சிறிது தூரம் கடந்த நிலையில் 4-வது முறையாக வடம் அறுந்தது.

மேலும் தேர்களை தள்ளுவதற்காக போடப்படும் தடிகள் மீது கட்டப்பட்டிருந்த வடமும் அறுந்தது. இதனால் வழக்கமாக மதியத்துக்குள் போத்தீஸ் முனையை வந்தடையும் தேர் , மதியத்தை தாண்டியும்மேற்கு ரத வீதியிலேயே நின்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து வடத்தை கொண்டு வந்து கட்டிய பின்னர் தேர் தொடர்ந்து இழுக்கப்பட்டது. தேர் வடங்கள் அடுத்தடுத்து அறுந்ததை அபசகுனமாக பக்தர்கள் கருதி வேதனை தெரிவிக்கிறார்கள்.

தரமின்றி சாலை சீரமைப்பு: இது ஒருபுறமிருக்க ரதவீதிகளில் சாலை மிகவும் மோசமாக இருந்ததால் தேரை நிலைக்கு கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர். தேரோட்டத்துக்கு முன்னதாக ரத வீதிகளில் சாலை சீரமைப்பு நடைபெற்றபோதும் இப்பணியை சரிவர மேற்கொள்ளாமல் சாலையின் ஓரங்களில் மட்டும் தரமற்ற முறையில் தார்கலவையை கொட்டிசீரமைத்ததே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஒரு வழியாக இரவு 9-55 மணியளவில் சுவாமி தேர் நிலைக்கு வந்தது. தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டு 11.50 மணிக்கும், சண்டிகேஸ்வரர் தேர் நள்ளிரவுக்குப்பின் 12.45 மணியளவிலும் நிலையம் வந்தடைந்தது.

தேரோட்டத்தின்போது முதலில் இழுக்கப்பட்ட விநாயகர் தேரின் 2 சக்கரங்கள் பராமரிப்பு இல்லாமல், இரும்பு தகடுகள் பெயர்ந்து, மரக்கட்டைகள் உளுத்துப் போய் இருந்தன. சிறிய தேர் என்பதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. தேரோட்டத்துக்கு தேர்களை தயார் படுத்தும் பணிநடைபெற்ற நிலையில் சக்கரங்கள், தேரை இழுக்கப் பயன்படும் வடங்களின் உறுதி தன்மையை கோயிலில் உள்ள பொறுப்பான அதிகாரிகள் மற்றும்அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், அத்துறையின் பொறியியல் பிரிவை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்று பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்

அதிகாரிகள் அலட்சியம்: திருநெல்வேலி நகரில் நடைபெறும் முக்கிய திருவிழா என்பதால் தேரோட்டத்துக்கான முன்னேற்பாடுகள் பணிகள் தொடர்பாக ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் முன்கூட்டியே நடத்தப்பட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அவற்றை அற நிலையத்துறை அதிகாரிகள் சரிவர நிறைவேற்றவில்லை. தேருக்கு முன்பு கோயில் நிர்வாகம் சார்பில் நாகஸ்வரம், தவில் உள்ளிட்ட எந்த ஒரு மங்கல வாத்தியமும் இசைக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. பக்தர்களின் காணிக்கை ஒருபுறம்,கோயில் வளாகம் முழுவதும் தீபம் மற்றும் பூஜை பொருட்கள், பிரசாதங்கள் விற்கும் கடைகளை குத்தகைக்கு விட்டுவியாபார தலமாக மாற்றியதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வரும் நிலையில் மங்கல இசை நிகழ்ச்சிக்கான தொகையை கூட ஒதுக்காதது ஏன்?

சிவனடியார்கள் பக்திப் பெருக்கால் தாமாகமுன்வந்து இசைத்த பஞ்ச வாத்திய இசையை தவிர தேருக்கு முன்பு எவ்வித மங்கல வாத்தியங்களும் இசைக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. உபயதாரர்கள் மூலமே திருவிழா நாட்களில் பெரும்பாலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கோயில் திருவிழாவை திறம்பட நடத்த அறங்காவலர் குழு முயற்சி மேற்கொள்ளாதது ஏன்? என்று பக்தர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி குமுறுகின்றனர்.

உண்மை நிலவரம் மூடிமறைப்பு: இந்த விவகாரம் நேற்று சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இதற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தடி போட்டு நெம்புவதற்கு முன்பாக பக்தர்கள் பக்தி பரவசத்தில் இழுத்ததால் நெல்லையப்பர் தேரின் வடம் அறுந்ததாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் உண்மையான நிலவரத்தை அவருக்கு அதிகாரிகள் தெரிவிக்காமல் மறைத்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

450 டன் எடை கொண்ட தேரை தடி போட்டு நெம்பாமல் பக்தர்கள் இழுப்பதற்கு சாத்தியமே இல்லை. தேருக்கு பின்னால் அமர்ந்திருப்பவர் தடி போடப்படுவதை உணர்த்தும் விதமாக முரசு கொட்டி , தேரை இழுக்குமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவித்த பின்னரே தேர் இழுக்கப்படும். விநாயகர் தேர் சக்கரங்கள் உளுத்துப் போய் இருந்தது, வடம் இற்றுப் போய் இருந்தது ஆகியவற்றை மறைத்து அதிகாரிகள் தரப்பில் அமைச்சருக்கு பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாக பக்தர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தேர் வடங்கள் அறுந்ததை ஒரு பாடமாக கருத்தில்கொண்டு வரும் ஆண்டுகளில் சக்கரங்களை சீரமைத்து, வடங்களை புதிதாக தயார் செய்துஆனித் தேர் திருவிழாவை எவ்வித குறைபாடுகளும் இன்றி சிறப்புற நடத்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும், திருநெல்வேலி மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களும் முன்வர வேண்டும் என்பதே பக்தர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x