Published : 21 Jun 2024 11:33 AM
Last Updated : 21 Jun 2024 11:33 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேரோட்டத்தில் பங்கேற்று தேர் இழுக்கிறார்கள்.
நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனிப்பெருந்திருவிழா சிறப்புமிக்கது. இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் 8-ம் நாளான நேற்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி நடராச பெருமான் பச்சை சாத்தி எழுந்திருந்து திருவீதியுலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்குமேல் 4 மணிக்குள் சுவாமி அம்மன் தேரில் எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதலில் விநாயகர் தேர், தொடர்ந்து சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுக்கிறார்கள்.
தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாநகரம், வெளிமாவட்ட காவல்துறையினர் என்று மொத்தம் 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 147 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் திருக்கோயிலின் உட்புறமும், வெளிப்புறமும் கண்காணிக்கப்படுகிறது. குற்றங்களை தடுக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் ரதவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். கோயிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் 16 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர்கள் பற்றியவிவரங்களையும், ஏனைய விவரங்களையும் இங்குள்ள காவல்துறையினரிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ குழு, நடமாடும் கழிப்பறைகள் என்று பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களும், பொதுமக்களும் சாதி ரீதியிலான பனியன்கள், கயிறுகள், கொடிகள் முதலியவற்றை பயன்படுத்த காவல்துறை தடைவிதித்துள்ளது. மேலும் சாதி தலைவர்கள் குறித்த கோஷங்களை எழுப்ப கூடாது என்றும் இதை மீறுவோர் மீதும், அவர் சார்ந்துள்ள அமைப்புகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேரோட்டத்தின்போது 4 ரதவீதிகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஊதல்களை விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தேரோட்டத்தையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, நெல்லையப்பர் கோவில் வளாகம் முழுவதும், கிழக்குரதவீதி, மேற்குரதவீதி கீழ்புறம், மேற்குமாடவீதி, வடக்குரதவீதி, தெற்குரதவீதி வடபுறம், மார்க்கெட், போலீஸ் குடியிருப்பு, அண்ணாதெரு, தமிழ்சங்கம் தெரு, ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT