Published : 21 Jun 2024 04:37 AM
Last Updated : 21 Jun 2024 04:37 AM
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பலர் அலிபிரி மற்றும் நிவாசமங்காபுரம் அருகே உள்ள வாரி மெட்டு மார்க்கமாக மலையேறி சென்று சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதற்கு முன்பு, இவ்வாறு மலையேறி செல்வோருக்கு இடையே தரிசன டோக்கன்களும் இலவச லட்டு பிரசாத டோக்கனும் வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி விடுவதோடு, சுவாமியையும் யாருடைய சிபாரிசு இல்லாமல் மிக சுலபமாக தரிசித்து வந்தனர்.
ஆனால், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆன பின்னர், இங்கு பதவி பொறுப்பேற்ற அதிகாரிகள், அறங்காவலர் குழு தலைவர்கள் ஏனோ திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதையே நிறுத்தி விட்டனர். இதனால் சர்வ தரிசனம் வாயிலாக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இவர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், கடந்த ஆட்சியில் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
தற்போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் திவ்ய தரிசன டோக்கன் முறை நேற்று முதல் வாரி மெட்டு மார்கத்தில் சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட்டது. இவ்வழியே நடந்துசெல்லும் பக்தர்கள் 1200-வதுபடிகட்டு அருகே அமைக்கப்பட்டுள்ள டோக்கன்கள் விநியோக மையத்தில் கண்டிப்பாக டோக்கன்கள் பெற்ற பின்னரே திருமலைக்கு செல்ல வேண்டும். ஆதார் அட்டையை காண்பிப்பதன் மூலம்அந்த டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அந்த டோக்கன்கள் இருந்தால் மட்டுமே அவ்வழியே செல்லும் பக்தர்கள் சுலபமாக சுவாமியை தரிசிக்க இயலும். இது வெற்றிகரமாக செயல்பட்டால் ஒருநாளைக்கு 10 ஆயிரம் டோக்கன்கள் வரை வழங்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
மீண்டும் திவ்ய தரிசன டோக்கன்கள் விநியோகத்தை தொடங்கியது குறித்து பக்தர்களிடம் கேட்டதற்கு, நாங்கள் இதனை எதிர்பார்க்கவே இல்லை. வேண்டுதலின் பேரில் படியேறி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவதும், அவர்களுக்கு மற்றவர்களை விட சுலபமாகவும், சீக்கிரமாகவும் சுவாமி தரிசனத்திற்கு வழி வகுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது தொடர வேண்டும் என பக்தர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு நோட்டீஸ்: நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமல ராவ், சர்வ தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது நாராயணகிரி க்யூ வரிசையில், பக்தர்களின் செருப்புகள் குப்பை போல் ஒரு பகுதியில் வீசப்பட்டுள்ளது. மேலும், கழிவறைகளில் துர்நாற்றம் வீசியது. இதனால், சுகாதர சீர்கேடு ஏற்பட்டுள்ளதை அறிந்த நிர்வாக அதிகாரி, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கும், தேவஸ்தான சுகாதார துறை அதிகாரிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT