Last Updated : 20 Jun, 2024 03:52 PM

 

Published : 20 Jun 2024 03:52 PM
Last Updated : 20 Jun 2024 03:52 PM

விமரிசையாக நடைபெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

காரைக்கால் அம்மையார் திருமண வைபவத்தை காணும் பக்தர்கள்.

காரைக்கால்: பிரசித்திபெற்ற காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அம்மையார் திருக்கல்யாண வைபவம் இன்று (ஜூன் 20) விமரிசையாக நடைபெற்றது.

அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், கைலாசநாத சுவாமி நித்யகல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட, காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

மணக்கோலத்தில் புனிதவதி அம்மையார்- பரமதத்த செட்டியார் (படங்கள்: வீ.தமிழன்பன்)

இந்த ஆண்டு திருவிழா நேற்று (ஜூன் 19) மாலை ஆற்றங்கரை சித்திவிநாயகர் கோயிலிலிருந்து மாப்பிள்ளை அலங்காரத்தில் பரமதத்த செட்டியாரை ஊர்வலமாக (மாப்பிள்ள அழைப்பு) அழைத்து வரும் நிகழ்வுடன் தொடங்கியது. இன்று காலை அம்மையார் மணிமண்டபத்தில் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு திருக்குளக்கரைக்கு புனிதவதி அம்மையார் எழுந்தருளினார். பின்னர் திருக்கல்யாண மண்டபத்துக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் வந்தடைந்ததும், திருக்கல்யாண நிகழ்வுகள் தொடங்கின.

திருமாங்கல்யம் சிவாச்சாரியாரால் பக்தர்களிடம் காண்பிக்கப்படுகிறது.

சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார்கள் பக்தர்களிடம் எடுத்துக் காண்பித்து, பக்தர்கள் முன்னிலையில், காலை 11 மணிக்கு அம்மையாருக்கும், பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர்.

அப்போது மணிமண்டபத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பெருக்குடன் அம்மையாரை வழிபட்டனர். பின்னர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டது.

புனிதவதி அம்மையாருக்கும்- பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது.

அம்மையார் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசிப்பது திருமணமாகாதோர், சுமங்கலிப் பெண்களுக்கு சிறப்பு எனக் கருதப்படுவதால் கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் திரளான அளவில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு இறைவனை தரிசித்தனர்.

திருக்கல்யாணம் நிகழ்ந்த பின்னர் மகா தீபாராதனைக் காட்டப்படுகிறது.

கோயிலுக்கு வெளியில் உள்ள பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு தரிசிக்கும் வகையில் டிஜிட்டல் திரைகள் மூலம் திருக்கல்யாண நிகழ்வுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. நிறைவாக பக்தர்களுக்கு மாங்கனி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தாம்பூலப் பைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

திருக்கல்யாணத்தை கண்டு தரிசிக்கும் பக்தர்கள்
திருக்கல்யாணத்தை கண்டு தரிசிக்கும் பக்தர்கள்

திருக்கல்யாண வைபவத்தில் புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட ஆட்சியர் து.மணிகண்டன், துணை ஆட்சியர் ஜி.ஜான்சன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசநாதர் கோயில் நிர்வாக அதிகாரி ஆர்.காளிதாசன், உபயதாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மாங்கனி பிரசாதம் பெற்றுச் செல்லும் பக்தர்கள்.
அம்மையார் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், ஏ.எம்.நாஜிம் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர்து.மணிகண்டன் உள்ளிட்டோர்.

மாங்கனி இறைத்தல்: இன்று இரவு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடும், புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. நாளை (ஜூன் 21) அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனையும் 6.45 மணிக்கு பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு(கடைத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில்) வருதலும் நடைபெறும்.

விழாவின் சிறப்பு மிக்க நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு அம்மையார் எதிர் கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி அம்மையார் கோயிலில் நடைபெறும்.

நாளை மறுநாள் (ஜூன் 22) அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜூலை 21-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. அதனால் ஒரு மாத காலத்துக்கு அம்மையார் மணி மண்டபத்தில் நாள்தோறும் மாலை பரத நாட்டியம், இசைக் கச்சேரிகள், ஆன்மிக, இலக்கிய சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x