Published : 03 May 2018 11:50 AM
Last Updated : 03 May 2018 11:50 AM
ஆ
ன்மிகப் பசிக்கு உணவளித்தவர் மட்டுமல்ல; தன்னையே உணவாகவும் கொடுத்த முன்மாதிரியே இயேசு. அவர் இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தன்னைப் பின்பற்றி வந்த மக்களுக்கு தொடர்ந்து ஆன்மிக உணவளித்தார். ஒருமுறை அவர் தன்னை நாடி வந்த மக்களை நோக்கி, “ உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்.
உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!” என்று கூறினார். ஆன்மிகப் பசி என்ன என்பதுபற்றி அந்த மக்கள் புரிந்துகொள்ளவில்லை.
பெத்சாயிதா கிராமத்தில்
அது கி.பி. 32-ம் ஆண்டு. யூதர்களின் பாஸ்கா பண்டிகைக்குச் சற்றுமுன் இயேசு நிகழ்த்திய அற்புதம் இது.(மத்தேயு 14:14-21) கலிலேயா கடலுக்கு வடக்கேயுள்ள பெத்சாயிதா என்ற கிராமத்தில் இயேசு தன் சீடர்களோடு தங்கியிருந்தபோது நெடுந்தொலைவில் இருந்தெல்லாம் குடும்பம் குடும்பமாக இயேசுவின் போதனையைக் கேட்க குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஐயாயிரம்பேர் திரண்டுவிட்டனர். இயேசுவின் போதனைகளில் மூழ்கியிருந்த மக்கள் நேரம் போனதை உணரவில்லை.
சூரியன் மறைய ஆயத்தமாகிக்கொண்டிருந்த நேரத்தில் சீடர்கள் இயேசுவிடம் வந்து “கூட்டத்தாரை அனுப்பிவிடுங்கள். கிராமங்களுக்குப் போய் அவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்”என்று சொல்கிறார்கள். ஆனால் இயேசு, “நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்”என்கிறார். அதைக் கேட்ட சீடர்கள் பயந்துபோய், “ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் இருக்கின்றன” என்பதை அவரிடம் சொன்னார்கள்.
சிலரைக் கொண்டு பலருக்கு
ஆனால், இயேசு அஞ்சவில்லை. தன்னை நம்பி வந்த மக்களின்மேல் இரக்கப்பட்ட இயேசு, தம் சீடர்களிடம் சொல்லி பசும்புல் தரையில் வரிசையாக மக்களை உட்கார வைக்கிறார். பின்னர் அந்த ஐந்து அப்பத்தையும் மீன் துண்டுகளையும் வானை நோக்கி உயர்த்திப் பிடித்து தன் தந்தையை நோக்கி ஜெபம் செய்துவிட்டு ரொட்டியைப் பிட்டு, மீன்களைப் பங்கிடுகிறார். பிறகு, அந்த உணவை மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடர்களிடம் கொடுக்கிறார். தன் சீடர்கள் சிலரே எனினும் அவர்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவை அளிக்கிறார். அனைவரும் திருப்தியாகச் சாப்பிட்ட பிறகும் ஏராளமான உணவு மீந்திருந்தது.
இயேசுவைத் தேடிய மக்கள்
இப்போது யோவான் எழுதிய நற்செய்திப் புத்தகத்தில் ஆறாம் அத்தியாயத்தில் வசனங்கள் 22 முதல் 29 வரையில் வாசித்துப் பாருங்கள். “இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களேயன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.
அப்போது, இயேசு கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்துக்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடி அக்கரையில் இருந்த கப்பர்நாகூம் என்ற நகரத்துக்குச் சென்றனர்.
அங்கே கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “நீங்கள் வரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.
அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில், தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.
இயேசுவின் கவலையும் வருத்தமும்
தங்கள் வயிற்றுக்காக உணவைத் தேடி அலைகிற மக்கள் கூட்டத்தைப் பார்த்து, இயேசு பரிதாபப்படுகிறார். அவர்கள் பசியால் இருக்கிறார்கள் என்பதற்காக அல்ல, மாறாக, பெரும் மக்கள் திரளுக்கு உணவளித்த தனது அற்புதத்தின் பொருளை அறிந்து கொள்ளாமல், வெறுமனே பசியாற்றுவதற்காகத் தன்னைத் தேடி வருகிறார்களே என்ற கவலையும் ஆதங்கமும்தான்.
இயேசுவின் நோக்கம் உடற்பசியை ஆற்றுவது மட்டுமல்ல, மக்களின் ஆன்மிகப் பசியைப் போக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆன்மிகப் பசியை அவர்கள் இயேசுவை நம்புவதன் மூலமாக மட்டும்தான், தணிக்க முடியும். அதை அறிந்துகொள்ளாமல் மக்கள் இருக்கிறார்களே என்பதுதான் இயேசுவின் வருத்தத்துக்கான காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT