Published : 18 Jun 2024 06:21 AM
Last Updated : 18 Jun 2024 06:21 AM
காரைக்கால்: காரைக்காலில் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நாளை (ஜூன் 19) மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கவுள்ளது.
63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும், காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா நடைபெறும். அதன்படி நிகழாண்டு விழா நாளை(ஜூன் 19) மாலை ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து பரமதத்த செட்டியாரை அம்மையார் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் தொடங்குகிறது.
நாளை மறுநாள் (ஜூன் 20) காலை 7.35 மணிக்கு புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வருதல், 8 மணிக்கு பரமதத்த செட்டியார் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வருதல், காலை 11 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பரமதத்த செட்டியாரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் திருவீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் நிகழ்வும் பவழக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா புறப்பாடும் 21-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறும்.
அன்று மாலை 6 மணிக்கு அம்மையார் பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைத்தல், இரவு 11 மணிக்கு பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோயிலில் பரமதத்தருக்கு 2-வது திருமணம், 22- ம் தேதி அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு, ஜூலை 21-ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆகி யவை நடைபெறுகிறது.
பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் ஆகியவை செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT