Published : 18 Jun 2024 06:30 AM
Last Updated : 18 Jun 2024 06:30 AM
திருமலை: செப்டம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக, இன்று முதல் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
செப்டம்பர் மாதம் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தங்களின் டிக்கெட்டுகளை ஆன்லைன் முலம் முன்பதிவு செய்து கொள்ள இன்று (18-ம் தேதி) காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி முன் பதிவு செய்துகொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தொலைபேசி மூலம்குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் சம்பந்தபட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவே அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை தேவஸ்தானத்துக்கு செலுத்தினால் போதுமானது.
பின்னர் இதற்கான டிக்கெட் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். 21-ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரம்மோற்சவம், கல்யாணஉற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை போன்றவற்றில் பங்கேற்க விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதம் இலவசமாக கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள், ஜூன் 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதே 22-ம் தேதி காலை 11 மணிக்கு வாணி அறக்கட்டளைக்காகவும், தங்கும் அறைகளுக்காகவும் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். 22-ம் தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைன் மூலம் மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளி பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவுக்கு ஜூன் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநாளில் மதியம் 3 மணிக்கு திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கான அறைகளை பெற ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜூன் மாதம் 27-ம் தேதி காலை11 மணிக்கு ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் (பொது) இலவச சேவைக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம். 12 மணிக்கு நவநீதசேவைக்காகவும், மதியம் 1 மணிக்கு உண்டியல் காணிக்கைஎண்ணும் பரகாமணி பணி செய்யவும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும், தேவஸ்தானத்தின் அங்கீகரிக்கப்பட்ட ttdevasthanams.ap.gov.in என்கிற இணையதளத்தில் மட்டுமே பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT