Published : 14 Jun 2024 04:55 AM
Last Updated : 14 Jun 2024 04:55 AM

நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஜூன் 21-ம் தேதி தேரோட்டம்

திருநெல்வேலி காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் நேற்று நடைபெற்ற ஆனித் திருவிழா கொடியேற்றம். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள பிரசித்திபெற்ற காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தாிசனம் செய்தனர்.

விழாவையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தங்கப் பல்லக்கில் அஸ்திர தேவர் புறப்பட்டு, அங்கூர விநாயகர் கோயிலில் பிடிமண் எடுத்துவந்து, திருக்கோயிலில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் கொடிப்பட்டம் ரத வீதிகளில் சுற்றி வர, ஆனிப் பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன.

நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றன. கொடிமரம் அருகில் அஸ்திர தேவர் மற்றும்கலசங்களுக்கும், மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையிலும் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றன. பின்னர்சுவாமியும், அம்பாளும் ஆலய பிரதான கொடிமரத்துக்கு அருகில்எழுந்தருளினர். கொடிப்பட்டத்துக்கு பூஜைகள் நடைபெற்ற பின்னர், கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து, கொடிமரத்துக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொடிமரத்துக்கு நட்சத்திர ஆரத்தி,கோபுர ஆரத்தி, சோடச உபசாரணைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி அம்பாள் ஆகியோர் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடை பெற்றது.

ஆனி பெருந்திருவிழா வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, இரவுநேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் மாலையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

வரும் 19-ம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி நடராச பெருமான் சிவப்பு சார்த்தி திருவீதி உலாவும், இரவு 10 மணிக்கு வெள்ளை சார்த்தி உட்பிரகாரம் உலா வருதலும் நடைபெறுகிறது. வரும் 20-ம் தேதி காலை 8 மணிக்கு சுவாமி நடராசப் பெருமான் பச்சை சார்த்தி திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்குமேல் 4 மணிக்குள் சுவாமி அம்மன், தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 6.30 மணிக்குமேல் 7.46 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்து இழுக்க, தேரோட்டம் நடைபெறவுள்ளது. விழாவின் 10-ம் நாளானவரும் 22-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x