Published : 03 May 2018 11:48 AM
Last Updated : 03 May 2018 11:48 AM
தி
ருமூலர் மதப்பற்றைக் கண்டனம் செய்கிறார். ‘மதம் மயக்கும் என்றால், மதம் அறிவிழக்கச் செய்யும் என்றால், மதம் வெறி பிடிக்கச் செய்யும் என்றால் அந்த மதம் மதம் அன்று, மலம்’ என்றார். நல்லது. அப்படியானால் திருமூலர் மதச் சார்பின்மை பேசுகிறார் எனலாமா? ‘மதம் பிடித்து அலையாதே’ என்று அன்பொழுக அறிவுரைக்கிற திருமூலரும் சைவம் என்ற மதத்தைப் பிடித்துக்கொண்டு அலையவில்லையா?
சிவம்அல்லது இல்லை இறையே; சிவம்ஆம்
தவம்அல்லது இல்லை; தலைப்படு வார்க்குஇங்கு
அவம்அல்லது இல்லை அறுசம யங்கள்;
தவம்அல்ல; நந்திதாள் சேர்ந்துஉய்யும் நீரே (திருமந்திரம் 1534)
சிவத்தை விட்டால் வேறு கடவுள் யாரும் கிடையாது; சிவமாகவே ஆகிவிடுகிற தவத்தை விட்டால் வேறு தவம் ஏதும் கிடையாது; பிற மதங்களின் வழியாகக் கடவுளைக் கண்டுகொள்வோம் என்று முயல்கிறவர்களின் முயற்சி வீண் முயற்சியே அல்லாமல் வேறில்லை. ஆகவே வேண்டாத வேலைகள் செய்வதைவிட்டு, நல்லபடியாகச் சிவத்தின் திருவடி சேர்ந்து விடுதலை பெறத் தலைப்படுங்கள்—என்று திருமூலர் பேசவில்லையா?
இவ்வாறு ஒரு கையால் சைவம் என்ற மதத்தையும் மறுகையால் மதச் சார்பின்மையையும் தழுவிக்கொள்வது முறையான செயலா? உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுகிற கள்ளச் செயல் இல்லையா இது? என்று கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளுக்குத் திருமூலரின் விடை என்ன என்று பார்ப்பதற்கு முன்னால், 2018, ஏப்ரல் 15-ம் நாளிட்ட The Hindu (Section 1, p.15), Column Width என்ற பகுதில் இடம்பெற்ற இரண்டு பத்திகளின் சாரத்தை இங்கே வழங்க விருப்பம்.
“A silver lining in an age of religious extremism” (மதத் தீவிரவாதக் காலத்தில் ஒரு வெளிச்சக் கீற்று) என்னும் தலைப்பில் Tabish Khair எழுதியிருந்த பத்தியின் சாரம்:
‘மதம் ஒன்றும் முற்றாகக் கண்டனம் செய்து களையப்பட வேண்டியதன்று. மதம் என்பது மக்களின் தேவை. மதத்தைக் கண்டிப்போர் மார்க்ஸ் எழுதிய சொற்றொடர் ஒன்றைச் சுட்டிக் காட்டுவர்: ‘மதம் மக்களுக்கு ஓப்பியம் போன்றது’. ஆனால் இந்தச் சொற்றொடரைமட்டும் சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்வது நீதியாகாது. மார்க்ஸ் எழுதியதை முழுமையாகப் படித்துப் பார்த்தால், மார்க்ஸ், மதத்தைத் தவிர்க்க முடியாத ஒரு வலி நீக்கியாகத்தான் பார்க்கிறார் என்பது விளங்கும். எளிய மக்களின் வலிய துன்பங்களைப் போக்குவதற்கு ‘உண்மையான மருந்துகள்’ (உண்மையான மருந்து என்று புரட்சியில் விளையும் பொதுமைச் சமுதாயத்தைக் குறிக்கிறார் மார்க்ஸ்) இன்னும் கிடைக்காத நிலையில், மக்களின் துன்பத்தை ஆற்றும் இடைக்கால வலிநீக்கியே மதம்.
சிந்தனையாளர்களிடமிருந்து மூடநம்பிக்கையாளர்களிடம்
இருபதாம் நூற்றாண்டின் அறிஞர்கள் மதத்தைக் குறித்து அறிவுபூர்வமாக உரையாடத் தயங்கினார்கள். மதத்தைக் கடுமையாகக் குற்றப்படுத்திப் பேசுவதற்கு மட்டுமே முன்வந்தார்கள். அதன் விளைவாக, மதம்பற்றிய உரையாடல்கள், மதத்தைச் சீர்தூக்கிப் பார்த்துச் செப்பனிடும் வேலைகள் தேங்கிப் போயின. மதம், சிந்தனையாளர்களிடமிருந்து சிந்திக்கும் திறனற்ற மூட நம்பிக்கையாளர்களுக்குக் கைமாறியது. இசுலாத்தை, இந்து மதத்தை, யூத மதத்தை, கிறித்தவத்தை என்று அறிஞர்களால் கைவிடப்பட்ட எல்லா மதங்களையும் பக்தர்கள் எனப்படும் அடிப்படைவாதிகள் கைப்பற்றிக்கொண்டார்கள். பக்தர்களின் மூடத்தனத்தைச் சகிக்க முடியாதவர்கள் கடவுளைக் கண்டனம் செய்தார்கள். ஆனாலும் கடவுளின் தேவை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.’
மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளுக்கும் மனம் சார்ந்த கடவுள் நம்பிக்கைக்கும் இடையில் ஒரு வெள்ளிக்கோடு வரையப்பட வேண்டியிருக்கிறது என்று முன்னிறுத்தும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக, “Secular Hindu, secular Muslim” (மதச் சார்பற்ற இந்து, மதச் சார்பற்ற முஸ்லிம்) என்னும் தலைப்பில் Rajeev Bhargava எழுதிய பத்தியின் சாரத்தைக் கோக்கலாம்:
‘மதச்சார்பின்மை என்பது என்ன என்ற கேள்வி எழும்போது, மதச் சார்பின்மை என்பது மதத்தை முற்றாக மறுதலிப்பது என்று சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டால், இந்துவாகவோ முஸ்லிமாகவோ இருக்கிறவர்கள் மதச் சார்பற்றவர்களாக இருக்கவே முடியாது என்று ஆகி விடுகிறது. இந்துவாகவும் முஸ்லிமாகவும் இருந்துகொண்டே மதச் சார்பில்லாமலும் இருக்கிறவர்களை இந்தப் பார்வை கண்டுகொள்ளாமல் விடுகிறது.
மதச்சார்பின்மை என்பது பல்வேறு மதங்களையும் ஒரே தன்மையுடன் ஆதரிப்பது என்று சிலர் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டால், மதம் என்பது மிகவும் புனிதமானது, எனவே ஆதரிக்கத் தகுந்தது என்று ஆகிவிடுகிறது. மதம் உண்டாக்குகிற சண்டைகள், சுரண்டல்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை இந்தப் பார்வை கண்டுகொள்ளாமல் விடுகிறது.
மதம் என்னும் அதிகார அமைப்பு
இரண்டு கருதுகோள்களுமே முழுமையானவையாக இல்லை. மதச்சார்பின்மை என்பதற்கு வேறு ஒரு வரையறை தரவேண்டியிருக்கிறது. அதன்படி, மதச்சார்பின்மை என்பது, நிறுவனமயமாக்கப்பட்ட, கெட்டிப்படுத்தி இறுக்கப்பட்ட மத வகைமைக்கு எதிராக நிற்றல்.
கெட்டிப்படுத்தப்பட்ட மதங்கள் உறுப்பினர்களின்மேல் தங்களுடைய விதிமுறைகளைத் திணிக்கின்றன. நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவற்றைச் செய்தே ஆகவேண்டும். செய்ய முடியாது என்று தலை சிலுப்பிப் புரட்சிக் கொடி தூக்கும் சிலருக்கு அதிகார மத அமைப்பு முரட்டுத்தனமான தண்டனைகள் வழங்கும்.
எனவே, மதச்சார்பின்மை என்பது கடவுளுக்கு வழிகாட்டுகிற மதத்தைவிட்டு விலகி நிற்பதோ அதைக் கண்டனம் செய்வதோ அன்று; சடங்குகளாலும் விதிமுறைகளாலும் கெட்டிப்படுத்தப்பட்டு, அதிகாரம் செலுத்தி அனைவரையும் ஆட்படுத்த நினைக்கிற மத அமைப்பைக் கண்டிப்பதும் தட்டிக் கேட்பதும்தான். மதத்தின் பெயரால் அடாவடி செய்கிறவர் தன்னுடைய மதத்தைச் சார்ந்தவர் என்பதற்காகப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், அவரை, அவருடைய அரக்கத்தனமான அதிகாரத்தைக் கண்டிப்பதும் தட்டிக் கேட்பதும்தான் மதச் சார்பின்மை. திருமூலர் சொல்ல முனைவதும் இதைத்தான்:
கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன்எங்கும் தோய்வுஉற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார்; குணம்கொண்டு கோதாட்டார்;
பித்துஏறி நாளும் பிறந்துஇறப் பாரே (திருமந்திரம் 1538)
தங்களுடைய குரலைக் கேட்டு உலகம் கடுப்பாவது கழுதைகளுக்குத் தெரியாது. உலகத்தின் கருத்தைக் கவனத்தில் கொள்ளாது தம்பாட்டுக்கு இன்பமாகக் கத்திக்கொண்டிருக்கும் அவை. அந்தக் கழுதைகளைப் போலவே காள் காளென்று கத்துகிறார்கள் மூதேவிகள் (கலதிகள்). என்ன இவ்வளவு கடுமையாகச் சொல்கிறார்? வேறு எப்படிச் சொல்வார்? பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்திருந்திருக்கிறது பரிபூரண ஆனந்தமாகிய சுத்த சிவம். அதனை உணர மாட்டாமல், ‘எங்கள் வழிக்கு வா, எங்கள் விதிகளைப் பின்பற்று, அப்போதுதான் இறையருள் பெறுவாய்’ என்று பாழ்த்த குரல் எடுத்துப் பாடினால், திருமூலர் கடுமையாகச் சொல்லாமல், பின் என்ன கொஞ்சுவாரா? தங்களுடைய குற்றத்தை உணர்கிற அறிவும்கூட இவர்களுக்குக் கிடையாது. இவர்களெல்லாம் பிறப்பார்கள், சாவார்கள், வேறேதும் ஆக மாட்டார்கள், பைத்தியக்காரர்கள்!
(திருமூலரின் சமத்காரம் தொடரும்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT