Published : 07 Jun 2024 11:05 AM
Last Updated : 07 Jun 2024 11:05 AM
விழுப்புரம்: மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு (வியாழக்கிழமை) வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மழையில் நனைந்தபடி பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் நேற்று இரவு (வியாழக்கிழமை) வைகாசி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால் தயிர் இளநீர் தேன் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அங்காளம்மனுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு 10.30 மணிக்குமேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர் தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது இதையடுத்து இரவு 11.45 மணிக்கு உற்சவர் அங்காளம்மனை கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் ஆட்சியர் டாக்டர் பழனி,விழுப்புரம், கடலூர், சேலம்,வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மழையில் நனைந்த படி அம்மன் தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம்,அறங்காவலர் குழுத்தலைவர் சுரேஷ் மேலாளர் மணி உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். ஊஞ்சல் உச்சத்தை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT