Published : 01 Jun 2024 05:40 AM
Last Updated : 01 Jun 2024 05:40 AM

36 ஆண்டுகளுக்கு பிறகு திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேகம்

சென்னை: 36 ஆண்டுகளுக்கு பிறகு திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை திருவான்மியூர் மயூரபுரம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோயில் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சொத்தும், இதில் அமைந்துள்ள கோயிலையும் நிர்வகிக்க ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், தேஜோ மண்டல் சபா என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அதன் காரியதரிசி டி.டி.குப்புசாமி செட்டியார் என்பவரால் 9.9.1984-ல் தாமாக முன்வந்து இந்து சமய அறநிலையத்துறை வசம் கோயில் ஒப்படைக்கப்பட்டு அன்று முதல் தொடர்ச்சியாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

1985-ம் ஆண்டு முதல் மகா தேஜோ மண்டல் சபாவினரால் இது கோயில் அல்ல சமாதி எனக் கோரி பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை 27.03.2024-ல் வழங்கியது.

இத்தீர்ப்பில் அது ஸ்ரீமத்பாம்பன் குமர குருதாசர் கோயில் எனவும் அதன் நிர்வாகம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை உறுதி செய்தும் வழக்கை முடித்து வைத்தது.

சட்டவிரோத ஆக்கிரமிப்பு: இதற்கிடையில் இந்தக் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சின்னசாமி சமாதி நிலையத்தில், கோயில்நிர்வாகத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லாத உழவாரப்பணிக் குழு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ராஜா என்பவர், அருண், முருகேசன், சிவா மற்றும் ரமேஷ் ஆகியோர் ஆதரவுடன் தொடர்ந்து சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது, இந்து சமயஅறநிலையத் துறை சட்டவிதிமுறைகளுக்கு புறம்பானதாகும்.

நீண்டகால எதிர்பார்ப்பு: எனவே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படியும், இந்து சமய அறநிலையத் துறை சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டும் கோயில் நிர்வாகம் நடைபெறுவதற்கு ஏதுவாக கோயில் நிர்வாகத்துக்கு விரோதமாக செயல்பட்டுவரும் அமைப்பை சின்னசாமி சமாதி நிலையத்திலிருந்து வெளியேற்றி ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோயில் நேரடிஆளுகையின்கீழ் கொண்டுவரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சுமார்36 ஆண்டுகளாக பக்தர்கள்ஆவலுடன் எதிர்நோக்கும் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாசர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12-ம் தேதி வெகுவிமரிசையாக நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x