Published : 27 May 2024 05:22 AM
Last Updated : 27 May 2024 05:22 AM
மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா மே 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 10.15 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள், சிறப்பு பூஜை, தீப, தூப ஆராதனைக்குப் பின்னர் புறப்பட்டார். பின்பு மேலமாசி வீதி, வக்கீல் புதுத்தெரு வழியாகச் சென்று வைகை ஆற்றில் பெருமாள் இறங்கினார்.
ஆற்றைக்கடந்து சென்ற கூடலழகர், திவான் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மாலை5 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர், இரவு 10 மணிக்கு தசாவதார நிகழ்ச்சி நடந்தது. 12-ம்நாள் நிகழ்ச்சியாக இன்று (மே 27) காலை 7 மணிக்கு மோகினி திருக்கோலத்துடன் பத்தி உலாநடைபெறும். காலை 9 மணியளவில் கருட வாகனத்தில் வியூக சுந்தரராஜப் பெருமாள், ராமராயர் மண்டபத்திலிருந்து புறப்பட்டு பனகல் சாலை, யானைக்கல், கீழமாசி வீதி, அம்மன் சந்நிதி தெரு, கீழாவணி மூல வீதி வழியாக தெற்காவணி மூல வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 4 மணிக்கு திருமஞ்சனமாகி, இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் கோயிலுக்கு புறப்படுகிறார்.
விழாவின் 13-ம்நாள் இரவு விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. 14-ம் நாள் காலை உற்சவ சாந்தி அலங்காரத் திருமஞ்சனம் முடிந்து ஆஸ்தானம் சேருகிறார். அத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ந.யக்ஞநாராயணன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT