Published : 05 Apr 2018 10:52 AM
Last Updated : 05 Apr 2018 10:52 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 26: கடலுக்கும் வானுக்கும் நடுவிலேயே பற

தனக்கு முன்னிருக்கும் வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்தாக வேண்டிய நெருக்கடியான சூழலில் சிக்கிக்கொள்கிறார் நல்லவனாகிய கதைநாயகன். தீயவனாகிய எதிர்நிலையாளனால் தனக்குப் பிச்சையாக அளிக்கப்பட்ட ஒற்றை ரூபாய் நாணயத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் தோழனிடம், “பூ விழுந்தா பூப் பாதை; தலை விழுந்தா சிங்கப் பாதை. கடவுளோ தற்செயலோ, என் வாழ்க்கையை இது தீர்மானிக்கட்டும்” என்று காசை மேலே சுண்டிவிடுகிறார். பார்த்திருப்பவர்களின் இதயங்கள் படபடக்க, தலை விழுகிறது. “சிங்கப் பாதைடா” என்று தலைகுலுக்கிச் சீறிச் சினந்து எழுந்திருக்கும் கதைநாயகன் சிங்கப் பாதையில் அடியெடுத்து வைப்பதாக ஒரு பெருவெற்றித் திரைப்படத்தின் இடைவேளைக் காட்சி.

திரைப்படங்கள், பார்க்கிறவர்களின் சுவையுணர்ச்சியை முதன்மையாகக் கொண்டவை. எனவே, தனக்கு முன்னிருக்கும் வாய்ப்புகளைத் தீர ஆராய்ந்து முடிவெடுக்காமல் காசைச் சுண்டிப்போட்டுப் பூவா, தலையா? என்று தேர்வு செய்கிற மேற்படிக் காட்சியில் குற்றஞ்சொல்ல ஏதுமில்லை.

நடுநிலை என்ற நிலை

ஆனால், உண்மையாகவே தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஒன்று உருவாகும்போது, இரண்டில் ஒன்றைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன என்று நம்புவதும், உலகத்தை அது அல்லது இது, அப்படி அல்லது இப்படி என்று இரண்டாக மட்டுமே வகுத்துக்கொண்டு பார்ப்பதும் மிகவும் மோசமான, பழுதுள்ள பார்வை. உலகம் இரண்டால் ஆனதன்று; பலவற்றால் ஆனது. நேர் x எதிர், நீ x நான் என்பன போன்று வெறும் இரண்டு எதிர்வுகளை மட்டுமே வைத்துக்கொண்டு யாரும் உலகத்தை எதிர்கொள்ள முடியாது. எதிர்வுகளுக்கு இடையில் மற்றொரு நிலையும் இருக்கிறது—நடுநிலை.

தமிழ்நாட்டுச் சமூக ஊடகங்களில் மிகவும் பழிக்கப்பட்ட நிலை என்று ஒன்று உண்டென்றால், அது இந்த நடுநிலைதான். ஒரு விவகாரம் வெடிக்கும்போது, அதற்கு ஆதரவு நிலை எடுத்தவர்கள் ஒரு பக்கம் முழங்கிக்கொண்டிருக்க, எதிர்நிலை எடுத்தவர்கள் மற்றொரு பக்கம் முழங்கிக்கொண்டிருக்க, வேறு சிலரோ முழங்குகிற முனைப்பை ஒத்திவைத்துவிட்டு முன்னிருக்கும் விவகாரத்தைத் தீர விசாரித்துக்கொண்டிருப்பார்கள். விசாரணைக்குப் பிறகு அவர்கள் இரண்டில் ஒரு தரப்பைத் தேர்வுசெய்யலாம்; அல்லது இரு தரப்புகளும் பொய் என்று கருதி இரண்டையுமே மறுதலித்து, உண்மை எதுவோ அதைப் பேசலாம்;

அல்லது இரு தரப்புகளிலுமே பாதியளவு உண்மை இருப்பதாகக் கருதி இரண்டையும் தழுவிப் புதியது புனையலாம்; அல்லது இரு தரப்புகளுமே அவற்றைத் தாண்டிய, பிற தரப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டன என்று கருதி, விடுபட்ட தரப்புகளை முன்வைத்துப் பேசலாம். இவையெல்லாம், அவர்கள் செய்த விசாரணையையும், அதனால் பெற்ற விளக்கத்தையும், வாய் திறப்பதால் பயனுண்டா என்று எண்ணிப்பார்த்து அவர்கள் எடுக்கும் முடிவையும் பொறுத்தவை.

ஆனால், தங்களுக்கான தரப்புகளைத் தேர்வுசெய்துகொண்டு அவற்றைச் சார்ந்து நின்று பொங்குகிறவர்களோ நடுநிலையாளர்களைப் பழிப்பார்கள். ‘நடுநிலை என்று ஒரு நிலையே கிடையாது; நடுநிலை என்று சொல்கிறவனெல்லாம் தீமையின் பக்கமே நிற்கிறான்’ என்று ஏசுவார்கள். அவ்வாறு ஏசுவதன்மூலம் நடுநிலையாளர்களை ஏதேனும் ஒரு தரப்பின் பக்கம் தள்ள முயல்வார்கள். இவர்களைப் பொறுத்தவரை உலகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் ஆமென்போர் அல்லது இல்லையென்போர்; அவ்வளவுதான். ‘தராசுக்கோல் ஒன்று இந்தப் பக்கம் சாய வேண்டும் அல்லது அந்தப் பக்கம் சாய வேண்டுமே தவிர, நடுவில் நிற்கக் கூடாது’ என்று முழங்குகிறவர் பொருளின் எடையை எப்படி அறிவார்? வள்ளுவர் நடுநிலை வகிப்பவர்களை ‘சான்றோர்கள்’ என்று வாழ்த்துகிறார்.

குஞ்சி அழகும் கொடுந்தானைக்

கோட்டுஅழகும்

மஞ்சள் அழகும் அழகுஅல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

(நாலடியார், 131)

சீவிக் கொண்டையிட்ட தலைமுடியின் அழகோ மேலை மறைத்திருக்கும் சேலை முந்தானையின் கரைக்கோட்டு அழகோ மஞ்சளை அரைத்துப் பூசித் தங்கம்போலத் தகதகக்கும் முகத்தின் அழகோ அழகே அல்ல; ஆராயாமல் ஒரு தரப்பை ஆதரிக்கும் பிழையை நான் செய்துவிடாமல் என்னைத் தடுத்தாட்கொண்டு, எதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் நடுநிலை ஆளாக என்னை ஆக்கி வைத்த கல்வியின் அழகே அழகு என்று கல்வியை வாழ்த்துகிறது நாலடியார். கல்வியை வாழ்த்துவதன்மூலம் கல்வியின் சாரமாக இருக்கும் நடுநிலைப்பாட்டையும் ஆராய்ந்து முடிவெடுத்தலையுமே அது வாழ்த்துகிறது.

சூரியச்சூடு மெழுகை உருக்கியது

கிரேக்கத்தில், தைதலாசு என் கலைஞனும் அவன் மகன் இக்காரசும் மன்னனால் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில், கலைஞனாகிய தைதலாசு சிறையில் சிதறிக் கிடந்த பறவை இறகுகளைத் தைத்தும் மெழுகுகொண்டு ஒட்டியும் சிறகுகள் தயார் செய்கிறான். அவற்றைக் கட்டிக்கொண்டு தைதலாசும் இக்காரசும் சிறையிலிருந்து பறந்து வெளியேறத் தீர்மானிக்கிறார்கள். அப்போது தைதலாசு தன் மகன் இக்காரசிடம் சொல்கிறான்: “தம்பி, கடலுக்கும் வானத்துக்கும் இடையில் பறக்கும்போது கடலுக்கு அருகில் சென்றுவிட வேண்டாம்;

ஏனென்றால், கடல்நீர் பட்டுச் சிறகுகள் கனத்துவிடும்; பறக்க முடியாது. வானத்துக்கு அருகிலும் சென்றுவிட வேண்டாம்; ஏனென்றால், சூரியச் சூடுபட்டு இறகுகளை ஒட்டியிருக்கும் மெழுகு உருகிச் சிறகுகள் சிதைந்துவிடும்; பறக்க முடியாது. எனவே, கடலுக்கும் வானுக்கும் நடுவிலேயே பற.” இருவரும் பறந்து சிறையைவிட்டு வெளியேறினார்கள். விடுதலை பெற்ற இக்காரசுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உற்சாக மிகுதியில் உயரப் பறந்தான். சூரியச் சூடு மெழுகை உருக்க, சிறகுகள் சிதைந்து, கடலில் விழுந்து இறந்தான்.

பல்வேறு மரபுகளும் நடுவுநிலைமையை வாழ்த்திப் பேசுகின்றன. ‘முரட்டுத்தனத்துக்கும் கோழைத்தனத்துக்கும் நடுவில் உள்ளது துணிவு; பல்லிளிப்புக்கும் சிடுமூஞ்சித்தனத்துக்கும் நடுவில் உள்ளது நட்பு’ என்று நடுநிலை போற்றினார் அரிஸ்டாட்டில். அவர் போற்றிய நடுநிலை ‘சிங்கப் பாதை’ என்றல்ல, ‘தங்கப் பாதை’ என்று அழைக்கப்பட்டது.

‘ஆம் என்பாரின் பாதை ஒருபுறம்; இல்லை என்பாரின் பாதை மறுபுறம்; இரண்டுக்கும் இடையில் போகிறது தர்மத்தின் நடுப்பாதை. இன்பத்தைத் தேடுவதே வாழ்வு என்பாரின் பாதை ஒருபுறம்; இன்பத்தை மறுப்பதே வாழ்வு என்பாரின் பாதை மறுபுறம்; இரண்டுக்கும் இடையில் போகிறது தருமத்தின் நடுப்பாதை (மச்சிமாப் படிபதா)’ என்று நடுப்பாதையைத் தேர்ந்துகொள்ளச் சொல்லி அறிவுரைக்கிறார் புத்தர். சீனத்தின் தாவோயியத்திலோ பாதை என்றாலே நடுப்பாதைதான்.

நடுவுநின் றார்க்குஅன்றி ஞானமும் இல்லை;

நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை;

நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்;

நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே

(திருமந்திரம் 320)

என்று நடுநிலைமை பாடுகிறார் திருமூலர். எந்த ஒன்றிலும் தோய்ந்து உணர்ச்சிவசப்பட்டுத் தன்னை இழந்துவிடாமல், ஒரு சாட்சியைப்போலத் தள்ளி நின்று, நடுநிலையோடு பார்க்கிறவர்களுக்கு மட்டுமே பேரறிவு பிறக்கிறது. நடுநிலையோடு பார்க்கிறவர்கள் விவகாரத்தில் தோய்வதில்லை ஆதலால் அவர்கள் துன்பத்தில் சிக்குவதில்லை. துன்பத்தில் சிக்காமல் இருப்பதே இன்பந்தான் இல்லையா? எனவே, நடுநிலையாளர்களின் வழியையே நானும் தேர்வு செய்துகொண்டேன் என்கிறார்.

‘என் தரப்பைத் தேர்ந்தெடு’ என்று ஊடகங்களில் அதட்டுகிறார்கள் உலகியல்வாதிகள்; ‘ஆராய்ந்து, உண்மையின் தரப்பையே முன்னெடு’ என்று ஏடகங்களில் பரிந்துரைக்கிறார்கள் மெய்யியல்வாதிகள். அதட்டுகிறவர்களுக்கு அஞ்சி இதுவே என் தரப்பு என்று நாடகங்கள் நடிக்காமல், ஆய்ந்து ஆய்ந்து நிலைகொள்க.

(ஆய்வதைத் தொடர்வோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x