Published : 19 May 2024 11:53 AM
Last Updated : 19 May 2024 11:53 AM
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 5 தேர்களின் தேரோட்டம் இன்று (மே 19) நடைபெறுகிறது.
திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் அமைந்துள்ள, புகழ்பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு விழா கடந்த 5- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம், அடியார்கள் உற்சவம், செண்பக தியாகராஜ சுவாமி உன்மத்த நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்வான 5 தேர்கள் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக சனிக்கிழமை இரவு செண்பக தியாராஜ சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, இன்று காலை புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன்குமார், திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
விழாவில் காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT