Published : 07 May 2024 04:12 AM
Last Updated : 07 May 2024 04:12 AM

பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

பூண்டி மாதா பேராலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம். (உள்படம்) சப்பரத்தில் எழுந்தருளிய பூண்டி மாதா.படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்தியாவில் உள்ள பசிலிக்கா என்று அழைக்கப்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் பூண்டி மாதா பேராலயமும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் மே 6-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை ஆண்டுப் பெருவிழா நடைபெறும். அதன்படி, இந்தப் பேராலயத்தில் நேற்று மாலை ஆண்டுப் பெருவிழா தொடங்கியது. இதையொட்டி, மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதா சொரூபத்தை சிறிய சப்பரத்தில் வைத்து பக்தர்கள் இறைபாடல்களுடன் சுமந்து வந்தனர். சப்பரத்துக்கு முன்பாக மாதாவின் உருவம் வரையப்பட்ட வண்ணக் கொடி எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர், கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் கொடியை புனிதப்படுத்தி கொடிமரத்தில் ஏற்றி, விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் ‘மாதாவே வாழ்க, பூண்டி அன்னையே வாழ்க’ என்று முழக்கமிட்டனர். பின்னர் மாதா அரங்கத்தில் நடைபெற்ற திருப்பலியில் ‘மரியா- பூலோகம் போற்றும் அன்னை’ என்ற தலைப்பில் ஆயர் மறையுரையாற்றி அருளாசி வழங்கினார்.

விழாவில் பூண்டி மாதா பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன் அந்தோணி ராஜ், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் எஸ்.ஆல்பர்ட் சேவியர், உதவித் தந்தையர்கள் எஸ்.அன்புராஜ், எஸ்.அமலவில்லியம், ஆன்மிக தந்தையர்கள் ஏ.அருளானந்தம், பி.ஜோஸப் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 13-ம் தேதி வரை நவநாட்கள் திருப்பலி நடைபெறும். விழாவின் சிறப்பு அம்சமாக 14-ம் தேதி காலை பூண்டி மாதா பேராலய முன்னாள் பங்குத் தந்தைகள் லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோரின் நினைவுத் திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.

பின்னர் மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் முன்னிலையில் புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை வகித்து திருவிழா சிறப்பு திருப்பலியை நடத்தி ‘மரியா- வலிமை மிக்க பரிந்துரையாளர்’ என்ற தலைப்பில் மறையுரையாற்றி ஆசி வழங்கவுள்ளார்.

தொடர்ந்து அன்று இரவு 8.30 மணிக்கு மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை புனிதப்படுத்தி தொடங்கி வைக்கிறார். அன்று இரவு வாணவேடிக்கைகள் நடைபெறும். பின்னர் 15-ம் தேதி காலை 6 மணிக்கு ஆயர் தலைமையில் திருப்பலியும், மாலை கொடியிறக்கமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பூண்டிமாதா பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x