Published : 24 Apr 2024 04:20 AM
Last Updated : 24 Apr 2024 04:20 AM
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
நினைத்தாலே முக்கி தரும் திருத்தலம் ‘திருவண்ணாமலை’. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணா மலையில் உலக பிரசித்திப் பெற்ற அண்ணாமலையார் கோயில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் உற்சவம் நடைபெறும். இதில், கார்த்திகை தீபத் திருவிழா முக்கியத்துவம் பெற்றது. அண்ணா மலையாரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களில் இருந்து பக்தர்கள் வரு கின்றனர்.
தினசரி 10 ஆயிரம் பக்தர் களும், விடுமுறை நாட்களில் 20 ஆயிரம் பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் 30 ஆயிரம் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கை கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமி நாட்களில் அதிகம் இருக்கும். இந்நிலையில் சித்ரா பவுர்ணமி நேற்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவு பெற்றது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நேற்று அதிகாலை நடைபெற்றது.
பின்னர், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 50 ரூபாய் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டன. ராஜகோபுரம் வழியாக சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர். சுவாமி தரிசனம் முடிந்ததும், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து 15 மணி நேரம் இடைவிடாமல், சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ததாக கோயில் தரப்பில் கூறப்படுகிறது.
ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதி வழியாக பூத நாராயண கோயில் வரை வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டது. மேலும், பூத நாராயண கோயிலில் இருந்து பெரிய தெரு வரை தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டிருந்தது. பெரிய தெருவில் இருந்து சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். நான்கு தரிசன மேடைகள் வழியாக அனுமதிக்கப் பட்டு, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்தனர்.
மேலும் கர்ப்பிணி பெண்கள், முதியோர், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வரிசையில் காத் திருக்காமல் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அண்ணாமலையார் கோயில் உள்ளே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், பிஸ்கெட், நீர் மோர், குடிநீர், வாழைப்பழம் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. கோயில் வெளி பகுதியில் காத் திருந்த பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானத்தை ஆன்மிக அன்பர்கள் வழங்கினர். இதனை, ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
குறுக்கு வழியில் ‘பக்தர்கள்’: பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த காவலர்களின் எண்ணிக்கையில் பெரும்பகுதி, கோயிலை மையமாக கொண்டே இருந்தது. பெரிய தெரு மற்றும் தேரடி வீதியில் சுமார் 5 அடி அகலத்தில் பக்தர்களின் வரிசை அமைக்கப்பட்டது. இதில், இரு புறங்களில் கயிறு கட்டப் பட்டிருந்தன.
மேலும், 50 அடி இடைவெளியில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தடுப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, பக்தர்கள் செல் வதற்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது, கயிறு வழியாக குறுக்கு வழியில் பக்தர்கள் உள்ளே நுழைந்தனர். வரிசையில் காத் திருந்த பக்தர்கள் கூச்சலிட்ட தால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் தங்களது கடமையை தொடர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT