Published : 22 Apr 2024 09:15 AM
Last Updated : 22 Apr 2024 09:15 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா கோலாகலம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் முத்திரை பதிக்கும் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத் திருவிழா இன்று (ஏப்.22) கோலாகலமாக நடைபெற்றது. தேரோடும் மாசி வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் “ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா” என்ற கோஷங்கள் விண்ணதிர லட்சக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர். இதில் முக்கிய விழாவான திருக்கல்யாணம் ஏப்.21ல் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்துக்காக திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினர்.

அதனைத்தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிமுதல் 4.30 மணிக்குள் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளினர். பின்னர் கீழமாசி வீதியிலுள்ள தேரடிக்கு 5.15 மணிக்கு கோயிலிருந்து புறப்பாட்டனர்.இங்கு தேரடி கருப்பணசாமியிடம் சிறப்பு பூஜை செய்து உத்தரவு பெற்று பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் தனித்தனி தேரில் எழுந்தருள்கின்றனர். சிறப்பு பூஜைகள், தீபாராதனை முடிந்து காலை 6.35 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முதலில் சுவாமி தேர் புறப்பட்டது. அதனைத்தொடர்ந்து அம்மன் தேர் 6.55 மணியளவில் புறப்பட்டது.

பிரியாவிடையுடன் சுவாமி

தனித் தேரில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நிலையிலிருந்து புறப்பாடானது. மாசி வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஹரஹர சங்கர மகாதேவா, மீனாட்சி சுந்தர மகாதேவா’ என்ற கோஷங்களை விண்ணதிர முழங்கினர்.

வழிநெடுகிலும் வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் குறிப்பாக இளைஞர்கள் சோர்ந்துவிடாமல் இருக்க தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு நீர்மோர், பானகம், சர்பத், ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை ஆங்காங்கே வியாபாரிகள், ஜவுளித்தொழில் நிறுவனத்தினர் வழங்கினர். பாரம்பரிய இசைக்கருவிகள் மூலம் சிவபக்தர்கள், வாசித்தும், இசைத்தும் சிவபெருமானை வழிபாடுசெய்தனர்.

இன்று இரவு 7 மணியளவில் சப்தாவர்ணச் சப்பரத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் நான்கு மாசி வீதிகளில் எழுந்தருளுவர். நாளை (ஏப்.23) தீர்த்தம் மற்றும் தெய்வேந்திர பூஜையும், அன்றிரவு 7 மணியளவில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். இரவு 10.15 மணியளவில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, பவளக்கனிவாய்ப்பெருமாள் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்வோடும், கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுறும். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் ச.கிருஷ்ணன் தலைமையில் அறங்காவலர்கள் ,கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x