Published : 22 Apr 2024 05:35 AM
Last Updated : 22 Apr 2024 05:35 AM
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்குகிறது. ஏப்ரல் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற திருக்கோலத்தில் வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமத்துடன், தனது தேவியார் ருக்மணி பிராட்டி, மகன் பிருத்யும்னன், பேரன்அநிருத்தன், தம்பி சாத்யகி என குடும்ப சகிதமாக இக்கோயிலில் சேவை சாதிக்கிறார். குருஷேத்திரப் போரில் தன் முகத்தில் ஏந்தியவடுக்களுடன் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனி மாதமும் விமரிசையாக நடைபெறும்.
அந்த வகையில், பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரைமாத பிரம்மோற்சவம் நாளை(ஏப்.23) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாளில் புன்னைமர வாகனவீதி உலாவும், 2-ம் நாள் (ஏப்.24)விழாவில் பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் 3-ம் நாளில் (ஏப்.25) கருடசேவையும் நடைபெறுகிறது.
4-ம் நாளில் (ஏப்.26) சூரிய பிரபை, சந்திர பிரபை, 5-ம் நாள் (ஏப்.27) நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 6-ம் நாள் (ஏப்.28) அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடைபெறும். இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7-ம் நாளான ஏப்.29-ம்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. 8-ம் நாள்(ஏப்.30) திருவிழாவில் வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, 9-ம் நாள் (மே 1) காலை 6.15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது.
10-ம் நாள் (மே 2) கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மே 3 முதல் 10-ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT