Published : 22 Apr 2024 06:15 AM
Last Updated : 22 Apr 2024 06:15 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான திருத்தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. அஹோபில மடத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 60 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட திருத்தேரில் காலை 5.30 மணியளவில், தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து, காலை 7.30 மணியளவில், திருத்தேர் தேரடியிலிருந்து புறப்பட்டு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக காலை 9.15 மணியளவில் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இதில், திருவள்ளூர், பூந்தமல்லி, திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, திருத்தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு, ‘கோவிந்தா... கோவிந்தா..’ என்று பக்தி முழக்கமிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், மோர், குளிர் பானங்கள், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர். விழா பாதுகாப்புப் பணியில், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேரை பின் தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல், சித்திரை பிரம்மோற்சவ விழாவில், வரும் 23-ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு மற்றும் கோயில் தெப்பக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளன என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT