Published : 20 Apr 2024 12:27 PM
Last Updated : 20 Apr 2024 12:27 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் நான்கு ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கியத் நாளான சித்திரை தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
கடந்த 2015 -ம் ஆண்டுக்கு பிறகு இக்கோயிலின் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி மேலவீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேருக்கு கடந்த 15-ம் தேதி சித்திரை தேரோட்டத்துக்கான முகூர்த்த கால் நடப்பட்டு, அன்று முதல் தேர் கட்டுமானப்பணிகள் நடைபெற்றன. இந்த தேர் சாதாரணமாக 19 அடி உயரமும், 18 அடி அகலமும், 40 டன் எடையும் கொண்டது. தேரை அலங்கரிக்கப்படும் போது, 50 அடி உயரமும் 43 டன் எடையும் அதிகரித்து காணப்படும். இந்த தேரில் 252 சுவாமிகளின் சிற்பங்களும், 165 வெங்கல மணிகளும் உள்ளன.
இதையடுத்து விழாவின் முக்கிய நாளான தேரோட்டம், இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீகாரியம் சுவாமிநாதசுவாமி தேசிக சுவாமிகள், அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கவிதா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து தேர் புறப்படும் போது தேங்காய் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டு தேர் புறப்பட்டது.
முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு தேரில் தியாகராஜ சுவாமியும் கமலாம்பிகா அம்பாளும் எழுந்தருளினர். சித்திரை தேருக்கு முன்பாக விநாயகர், முருகனும், பின்னால் அம்பாள், சண்டீகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறிய தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் பாதுகாப்பாக வடம் பிடித்து செல்ல தேவையான ஏற்பாடுகளை காவல்த்துறை, தீணையப்புத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செய்தனர்.
14 இடங்களில் அர்ச்சனை செய்த பக்தர்கள்: தேரில் உள்ள சுவாமிக்கு தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்ய ஏதுவாக மேலவீதியில் சந்து மாரியம்மன் கோயில், கொங்கனேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதியில் ராணி வாய்க்கால் சந்து, ரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், கீழவீதியில் கொடிமரத்து மூலை மாரியம்மன் கோயில், விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், மானோஜியப்பா வீதி விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், காளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் தேர் நின்றது. அந்த இடங்களில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல் தஞ்சாவூர் காமராஜர் மார்கெட் காய்கனி மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சார்பில் மார்க்கெட்டுக்கு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு தன்னார்வலர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பானகம் ஆகியவை வழங்கினர்.
மின்கம்பிகளில் சிக்கிய தேர்: பெரிய கோயில் தேர் நிலையிலிருந்து புறப்படும் போது, அருகே இருந்த கட்டிடத்தில் தேர் அலங்கார சீலைகள் சிக்கின. பின்னர் அதனை சீரமைத்து சில நிமிடங்கள் கழித்து தேர் புறப்பட்டது. பின்னர் மேலவீதி கொங்கனேஸ்வரர் கோயில் அருகே சென்றபோது இருபுறமும் இருந்த மின் கம்பிகளில் தேர் சிக்கியது. பின்னர் தேர் தொம்மைகள், தேர் அலங்கார சீலைகளின் அகலம் குறைக்க ரம்பத்தால் அலங்கார கம்புகளின் அளவை குறைத்தனர். அதன்பின்னர் தேர் அங்கிருந்து புறப்பட்டது.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் மின்கம்பிகளில் சிக்கியது. அப்போது அருகே உள்ள மின்கம்பத்திலிருந்து ஊழியர்கள் சீரமைத்தபோது, மின்கம்பத்திலிருந்து தளவாடப் பொருட்கள் கீழே விழுந்ததில், கீழே நின்று கொண்டிருந்த மணிகண்டன், வெங்கடேஷ் என்ற இரு மின் ஊழியர்கள் லேசான காயமடைந்தனர். பின்னர் தேர் மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக தேர் நிலைக்கு வந்தடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT