Published : 14 Apr 2024 04:04 AM
Last Updated : 14 Apr 2024 04:04 AM
குமுளி: கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் வன விலங்குகளை சீண்டும் வகையில் சத்தம் எழுப்பும் பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது என்று இரு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்ட தமிழக எல்லையான கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையின் விண்ணேற்றிப் பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயி லுக்கு தமிழகத்தின் பளியன்குடி வழியே நடைபாதையும், கேரள மாநிலத்தின் குமுளி வழியே ஜீப் செல்வதற்கான பாதையும் உள்ளன. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள ராஜிவ்காந்தி கலை அரங்கத்தில் தேனி, இடுக்கி மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தேனி, இடுக்கி ஆட்சியர்கள் ஆர்.வி. ஷஜீவனா, ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோயிலுக்குச் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி, பாதைகளை செப்பனிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா கூறியதாவது: இந்தாண்டு தேர்தல் காலத்தில் திருவிழா நடைபெற உள்ளது. ஆகவே தேர்தல் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில், பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கம் அதிகம்இருப்பதால் குடிநீர் வசதி அதிகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்லலாம்.
அதேபோல் பக்தர்கள் கோயிலில் இருந்து மாலை 5.30 மணிக்குள் கீழே இறங்க வேண்டும். பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் மற்றும் ட்ரோன்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளை சீண்டும் வகையில் சப்தம் எழுப்பும் பொருட்களை கொண்டு செல்லக் கூடாது. உணவு, வாழைப் பழம், 5 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் மற்றும் நீராகாரங்கள் வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயிலுக்குச் செல்லும் வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டு வரும் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும். இந்த அனுமதிச் சீட்டை அன்று ஒருநாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடலூர் அருகே பளியன்குடி மலைப் பகுதி வழியே வருபவர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தேனி, இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சிவ பிரசாத், விஷ்ணு பிரதாப், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் சி.ஆனந்த், இடுக்கி மாவட்ட துணை ஆட்சியர் அருண் உட்பட இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT