Last Updated : 19 Apr, 2018 11:18 AM

 

Published : 19 Apr 2018 11:18 AM
Last Updated : 19 Apr 2018 11:18 AM

உங்கள் விலங்கை அறிந்துகொள்ளுங்கள்

 

ம்மில் பெரும்பாலானவர்கள் சில வழக்கங்கள், உறவுகள், உணர்வுநிலைகள் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம். அவை ஒருகட்டத்தில் நமக்கு ஊறு விளைவிப்பதாக இருப்பினும் அவற்றைத் தொடர்கிறோம். அறிவுக்கு அது சரியானதல்ல என்று உறுதியாகத் தெரிகிறது. ஆனால், நமது விருப்பத்தின் ஆற்றலே தொடர்ந்து வெல்கிறது. நமது அறிவால் விருப்பத்தின் வலிமையைத் தடுக்க முடியவில்லையே என்ற குற்றவுணர்வும் சூழ்கிறது. ஆனால், அது தேவையில்லை. ஏனெனில், மனிதர்கள் அனைவரின் செயல்களையும் 90 சதவீதம் விருப்பமே தீர்மானிக்கிறது. அதை ஒரு மெல்லிய போர்வை போல் படர்ந்துள்ள 10 சதவீத அறிவைக்கொண்டு அடக்கவே முடியாது. முட்டி முட்டித் தலை வலிக்கவே செய்யும்.

அப்படியென்றால் என்னதான் வழி? அது தான் நமது உண்மையான இயல்பு என்னவென்று தெரிந்துகொள்வது. நமது உள்ளுயிரின் இயல்பை எந்தவித மனத்தடையும் வெறுப்பும் ஒதுக்கலும் இல்லாமல் அடையாளம் காணவும் புரிந்துகொள்வதற்கும் அதற்கேற்றபடி நெறிப்படுத்தவும் உதவுபவைதாம் ஜென் எருது ஓவியங்கள்.

பழக்கங்களை நெறிப்படுத்த, பழக்கங்களைக் கவனிக்க வேண்டும். விழைவுகளை நெறிப்படுத்த விருப்பங்களை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். சந்தோஷமின்மையைக் குறைக்க நம் சோகத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறது ஜென் பவுத்தம். நம்மை மையப்படுத்திய நம் கதைகளையும் விருப்பங்களையும் ஆசைகளையும் கொஞ்சம் விலக்கிவிட்டுப் பார்த்தால், இந்த உலகத்தின் மையம் நாம் அல்ல என்பது தெரியவரும். இந்தப் பிரபஞ்ச முழுமையின் ஒரு அங்கம்தான் நாம் என்பது தெரியவரும். நாம் நம்மைப் பற்றி நினைத்திருப்பது எதுவும் நமது உண்மையான இயல்பு அல்ல என்பதைத்தான் எருதுப் படங்கள் உணர்த்துகின்றன.

12-ம் நூற்றாண்டில் சீனாவைச் சேர்ந்த ஜென் குரு ககுவான் வரைந்த 10 படங்களின் தொடர் அது. இந்தப் படத்தில் ஒரு சிறுவன் ஒரு எருதைத் தேடி மலைவனத்தில் அலைகிறான். எருது என்னவாகிறது என்பதை சித்திரங்கள் வழியாகக் காண்போம்.

எருதைத் தேடி

எருதைத் தேடி வனத்தின் பாதையில் சென்றேன்

உயர்ந்து வளர்ந்த புற்களை விலக்கித் தேடிப் பார்த்தேன்

பெயரற்ற ஓடைகளைக் கடந்தேன்

குறுக்கே வரும் மலைகளில் ஏறினேன்

எனது பலமெல்லாம் குறைந்து

எனது உயிர் ஆற்றல் தீர்ந்தது

என்னால் எருதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

 

காலடித் தடங்கள் தெரிந்தன

மரங்கள் அடர்ந்த ஆற்றின் கரையில்

அதன் பாதச் சுவடுகள் தெரிந்தன.

நறுமணம் வாய்ந்த புற்களுக்குக் கீழேயும்

அது தன் தடங்களைப் பதித்திருந்தது.

யாருமே போகாத மலை முகடுகளிலும் அவை தெரிந்தன

மேன்மை நாடும் நாசியாக இருந்தாலும்

அது விட்டுச் சென்ற தடங்களைக்

கவனிக்காமல் இருக்கவே முடியாது.

எருதைப் பார்த்தல்

குயிலின் பாடல் கேட்கிறது

சூரியன் இதமாகவும் காற்று மென்மையாகவும்

மரங்கள் பசுமையாகவும் இருக்கும்

இந்தக் கரையில்

எந்த எருதும் ஒளியவே முடியாது

அத்தனை பெரிய தலையையும்

கம்பீரமான கொம்புகளையும்

எந்த ஓவியரால் வரைய முடியும்?

 

எருதைப் பிடித்தல்

மிகச் சிரமமான போராட்டத்துக்குப் பிறகு

அதைப் பிடித்தேன்

அதன் பிடிவாதமும் ஆற்றலும் அளப்பரியது.

ஒன்று அது என்னை தரதரவென்று

மேகக் கூட்டத்துக்கும் மேலே இழுத்துப் போய்விடும்

அல்லது

அது விளிம்பில் நின்றிருக்கும்

பாதாளத்தில் என்னைத் தள்ளிவிடக்கூடும்

 

எருதை வசப்படுத்தல்

கயிறும் சவுக்கும் அவசியம்

இல்லையெனில் அது மீண்டும்

புழுதி மிகுந்த பாதைக்குப் போய்விடும்.

கடுமையான பயிற்சிக்குப் பிறகு

அது இயல்பாகவே சாந்தமாகி விட்டது

பின்னர், சங்கடமேதுமின்றி

தனது எஜமானனுக்குப் பணிந்தே விட்டது.

எருதோடு வீடு திரும்புதல்

எருதை வீட்டுக்கு ஓட்டி

மலைப் பாதையில் மெதுவாக

வீடு திரும்பினேன்.

எனது புல்லாங்குழல்

சாயங்காலத்துக்குள் ஊடுருவியது.

எனது நாடித்துடிப்புடன் சேர்ந்து

லயத்துடன் ஒலிக்கும்

இந்தப் பாடலைக் கேட்பவர்கள்

எவரும் என்னுடன் சேர்ந்துகொள்ளலாம்.

கடந்து விட்ட எருது

எருதை ஓட்டிக்கொண்டு

நான் வீடு வந்து சேர்ந்தேன்.

நான் தற்போது சாந்தமாக உணர்கிறேன். எருதும் ஓய்வெடுக்கிறது.

அந்தியும் வந்துவிட்டது. ஆனந்தமான நிலையில்

நான் எனது கூரை வேய்ந்த குடிலின் வாயிலில் அமர்ந்திருக்கிறேன்.

நான் எனது கயிறையும் சவுக்கையும்

கைவிட்டு விட்டேன்.

கடந்துவிட்ட எருதும் சுயமும்

சவுக்கு கயிறு

அந்தச் சிறுவன்

எருது எல்லாம் ஒன்றுமின்மையில் சேர்ந்துவிட்டது.

இந்தச் சொர்க்கம் அகன்றது,

அதை எந்தத் தகவலும் மாசுபடுத்த முடியாது.

ஒரு பனித்தகடு எப்படி நெருப்பில் உயிர்தரிக்க முடியும்

இதுதான் மூதாதையரின் பாதை.

மூலாதாரத்தை அடைவது

வேருக்கும் ஊற்றுக்கண்ணுக்கும் திரும்புவதற்கு

எத்தனை அடிகள் நான் நடந்தேன்.

இதற்குப் பதில் குருடாகவும் செவிடாகவும்

இருந்திருக்கலாம்.

எனது உண்மையான அகத்தில்

உள்ளது இல்லாதது குறித்த

எந்தக் கவலையுமின்றி அமர்ந்திருக்கிறேன்.

நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பூக்களோ சிவப்பாக இருக்கின்றன.

சமூகத்துக்குத் திரும்புதல்

வெறுங்கால்கள்

மேலாடை இல்லாத உடலுமாக

உலகத்து மக்களுடன் இணைந்துவிட்டேன்.

கிழிந்த தூசி படிந்த உடைகள்தான்.

எப்போதும் ஆனந்தமாக இருக்கிறேன்.

எனது வாழ்க்கையை நீட்டித்துக்கொள்ளும்

எந்த மந்திரத்தையும் பயன்படுத்துவதில்லை.

தற்போது எனக்கு முன்னால்

இறந்ததாகத் தெரிந்த மரங்கள் அனைத்துக்கும்

உயிர் வந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x