Published : 11 Apr 2024 04:13 AM
Last Updated : 11 Apr 2024 04:13 AM

போச்சம்பள்ளி அருகே அரியக்கா, பெரியக்கா திருவிழா: 5 டன் கற்பூர ஒளியில் அம்மனை வழிபட்ட பக்தர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடந்த அரியக்கா பெரியக்கா கோயில் திருவிழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நடைபெற்ற அரியக்கா, பெரியக்கா கோயில் திருவிழாவில், 5 டன்னுக்கு மேல் கற்பூரம் ஏற்றி, அதன் ஒளியில் 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

போச்சம்பள்ளி அருகே அகரம் மருதேரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான அரியக்கா,பெரியக்கா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, தெலுங்கு வருடப் பிறப்பன்று (யுகாதி) திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில், கிருஷ்ணகிரி, தருமபுரிமாவட்டங்களைச் சேர்ந்த 18 கிராம மக்கள் கலந்து கொள்வார்கள்.

நடப்பாண்டு திருவிழாவை முன்னிட்டு, ஊத்தங்கரை அருகேஉள்ள எட்டிப்பட்டி கிராமத்திலிருந்த அரியக்கா, பெரியக்கா சிலைகள் நேற்று முன்தினம் மாலைமூங்கில் கூடையில் வைத்து, மருதேரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள கோயிலுக்கு எடுத்துவரப்பட்டன. அப்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து, பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, கோயில் முன்பு 5 டன்னுக்கு மேல் கற்பூரத்தை வைத்து தீபம் ஏற்றினர். விடிய விடிய கற்பூர ஒளியில் அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். கற்பூரம் நேற்று மாலை வரை ஒளிர்ந்தது. மேலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளை பக்தர்கள் பலியிட்டு, இறைச்சியை அங்கேயே சமைத்து, அம்மனுக்குப் படையலிட்டு, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பிரசாதமாக வழங்கினர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருப்பு நிற ஆடை மற்றும் பொருட்கள் கொண்டுவரத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. விழாவில், 18 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

இதையொட்டி, 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x